விநாயகர் சிலை ஊர்வலத்தில் கார் புகுந்து 3 பேர் உயிரிழப்பு
விநாயகர் சிலை ஊர்வலத்தில் கார் புகுந்து 3 பேர் உயிரிழப்பு
ADDED : செப் 04, 2025 12:33 AM

ஜாஸ்பூர் : சத்தீஸ்கரில், விநாயகர் சிலை ஊர்வலத்திற்குள் போதை நபர் ஓட்டி வந்த கார் நுழைந்ததில், மூவர் பலியாகினர்; 22 பேர் காயமடைந்தனர்.
சத்தீஸ்கரின் ஜாஸ்பூர் மாவட்டம், ஜுருதந்த் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, பந்தல்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை நீர்நிலையில் கரைப்பதற்காக கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
பகிசா - ஜாஸ்பூர் சாலையில் நேற்று முன்தினம் இரவு அந்த ஊர்வலம் சென்றது. அப்போது குடி போதையில் இருந்த நபர் ஓட்டி வந்த கார், தீடீரென கட்டுப்பாட்டை இழந்து ஊர்வலத்திற்குள் நுழைந்தது. அதிவேகமாக வந்த கார் மோதியதில், பலர் துாக்கி வீசப்பட்டனர்.
இதில், விபின் பிரஜாபதி,17, அரவிந்த் கெர்கெட்டா, 19, கிரோவதி யாதவ், 32, ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; மேலும் 22 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்து ஏற்படுத்திய போதை டிரைவர் சுக்சாகர் வைஷ்ணவ், 40, என்பவரை போலீசார் கைது செய்தனர்.