ADDED : டிச 17, 2024 10:11 PM
ராய்ச்சூர்; ராய்ச்சூரில் கட்டுப்பாட்டை இழுந்த லாரி கவிழ்ந்ததில், நீர்ப்பாசன துறையின் இரண்டு இன்ஜினியர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
ராய்ச்சூர் மாவட்டம், சிந்தனுாரில் ஜவலகெரா நீர்ப்பாசனத் துறை பிரிவில், ஜூனியர் இன்ஜினியர்களாக சிவராஜ் ராம்புர, 28, மல்லிகார்ஜுன சர்ஜாபூர், 29, பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் ஒப்பந்த பணியாளரான கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மெஹபூப், 30, என்பவருடன் நேற்று முன்தினம் இரவு பணி முடித்து, பி.டபிள்யூ., கேம்ப் அருகில் உள்ள டாலர்ஸ் காலனி சாலை ஓரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, ராய்ச்சூரில் இருந்து சிந்தனுாருக்கு நெல் உமி மூட்டைகளுடன் அதிவேகமாக சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து, மூவரின் மீதும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மூட்டைகளுடன் லாரி கவிழ்ந்ததால், ஜே.சி.பி., இயந்திரம் வரவழைக்கப்பட்டது. லாரியை அப்புறப்படுத்தியபோது, மூட்டைகள் விழுந்ததால், சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்தது தெரியவந்தது.
படுகாயமடைந்த லாரி ஓட்டுனர் பாஷா, கிளீனர் மெஹபூப் ஆகியோர், தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக, பல்லாரியில் உள்ள விம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிந்தனுார் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.