நேற்று மிக்-29 ரக போர் விமானம்; இன்று கடற்படை ஹெலிகாப்டர்: என்னதான் நடக்குது அடுத்தடுத்து!
நேற்று மிக்-29 ரக போர் விமானம்; இன்று கடற்படை ஹெலிகாப்டர்: என்னதான் நடக்குது அடுத்தடுத்து!
ADDED : செப் 03, 2024 10:57 AM

ஆமதாபாத்: 'ராஜஸ்தானில் நேற்று இந்திய விமானப்படையின் மிக்-29 ரக போர் விமானம் விபத்தில் சிக்கிய நிலையில், இன்று (செப்.,03) குஜராத், போர்பந்தர் அருகே கடலோரக் காவல் படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நமது விமானப்படைக்கு சொந்தமான மிக் 29 ரக போர் விமானம், நேற்று ராஜஸ்தானின் பார்மர் என்ற பகுதியில் உத்தராலி என்ற விமானப்படை தளம் அருகே வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது. விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரியத்துவங்கியது. விமானி காயமின்றி உயிர் தப்பினார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டது. விமான தீ பிடித்து எரிந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
3 பேர் மாயம்!
இந்நிலையில், இன்று(செப்.,03) குஜராத், போர்பந்தர் அருகே கடலோரக் காவல் படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. கப்பலில் காயமடைந்தவர்களை மீட்கச் சென்ற ஹெலிகாப்டர் கடலில் அவசரமாக தரையிறங்கிய போது விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரில் சென்ற ஒரு விமானி மீட்கப்பட்ட நிலையில் கடலில் விழுந்த மேலும் 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன. இந்திய கடலோரக் காவல்படையின் இலகுரக ஹெலிகாப்டர் குஜராத் வெள்ளத்தின் போது சிறப்பாக செயல்பட்டது.