இந்தியாவில் எங்கே வசிக்கிறார் ஷேக் ஹசீனா; வெளியான புதிய தகவல்
இந்தியாவில் எங்கே வசிக்கிறார் ஷேக் ஹசீனா; வெளியான புதிய தகவல்
UPDATED : நவ 17, 2025 08:29 PM
ADDED : நவ 17, 2025 08:11 PM

புதுடில்லி: மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ஷேக் ஹசீனா, இந்தியாவில் எங்கே இருக்கிறார் என்ற புதிய விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் நடத்திய பெரும் போராட்டம் அந்நாட்டில் அரசியல் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்தியது.
மாணவர்கள் போராட்டம் வெகுண்டு எழுந்ததால், அங்கு பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ, தமது நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்தியாவில் அவருக்கு அடைக்கலமும் கொடுக்கப்பட்டு உள்ளது.
அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சுட்டுக் கொல்லுமாறு ஷேக் ஹசீனா பேசியது போன்ற ஒரு உரையாடல் வெளியாகியது. அது உண்மையானதா, பொய்யானதா என்று தெரியாத நிலையில் அதை ஆதாரமாக வைத்து, வங்கதேச நீதிமன்றம், மனித குலத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது.
ஷேக் ஹசீனாவை குற்றவாளி என்று அறிவித்த வங்கதேச நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. தீர்ப்பு விவரங்களை அறிந்த ஷேக் ஹசீனா, இந்த தண்டனை பாரபட்சமானது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில் அவரை ஒப்படைக்குமாறு இந்தியாவிடம், வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது. இந் நிலையில், இந்தியாவில் ஷேக் ஹசீனா எங்கே தங்கி உள்ளார், அவரது முகவரி என்ன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அந்த தகவல்களின் விவரம் வருமாறு;
இந்தியாவில் புதுடில்லியில் ஷேக் ஹசீனா தற்போது லுட்யென்ஸ் பங்களா மண்டலத்தில் (Lutyens Bungalow Zone) வசித்து வருகிறார். இந்த பகுதி மத்திய டில்லியில் உள்ளது. அதி உயர் பாதுகாப்பு கொண்டது என அறியப்பட்ட பகுதியாகும்.
இங்கு ஷேக் ஹசீனாவுக்கு அதி உயர்ந்த பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி உள்ளது.

