பிப்., 1ம் தேதி முதல் இந்தியா -சீனா இடையே மீண்டும் விமான சேவை: ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
பிப்., 1ம் தேதி முதல் இந்தியா -சீனா இடையே மீண்டும் விமான சேவை: ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
ADDED : நவ 17, 2025 08:06 PM

புதுடில்லி: வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளிடையே நேரடி விமானங்கள் இயக்கப்படும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்து உள்ளது.
கொரோனா தொற்று மற்றும் எல்லைப் பிரச்னை காரணமாக, இந்தியா - சீனா இடையிலான விமான சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது இரு நாடுகள் இடையே உறவு சீரடைந்து வருவதை அடுத்து, நேரடி விமான சேவை மீண்டும் துவங்கி உள்ளது . அந்தவகையில், கடந்த மாதம், அக்டோபர் 26ல் மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் இருந்து சீனாவின் தொழில் நகரமான குவாங்சோவுக்கு நேரடி விமான சேவை துவக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த, நவம்பர் 9ல், 'சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' அந்நாட்டின் ஷாங்காயில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவையை துவக்கியது.
கடந்த நவம்பர் 10ம் தேதி முதல், 'இண்டிகோ' நிறுவனம், டில்லி - சீனாவின் குவாங்சோ நகருக்கு 'ஏ320 நியோ' என்ற இடைநில்லா நேரடி விமான சேவையை துவங்கியது. இந்நிலையில், வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளிடையே நேரடி விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. இதன்மூலம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு டில்லி - ஷாங்காய் இடையே நேரடி விமானம் இயக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2026ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் போயிங் 787-8 விமானத்தின் மூலம் வாரத்தில் 4 முறை டில்லி - ஷாங்காய் இடையே விமானம் இயக்கப்பட உள்ளது. இதில், வணிகப் பிரிவில் 18 சொகுசு மெத்தைகளுடன் சராசரி பிரிவில் 238 சொகுசு இருக்கைகள் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

