தொழிலதிபரை மயக்கி பணம் பறித்த ஆசிரியை உட்பட 3 பேர் கைது
தொழிலதிபரை மயக்கி பணம் பறித்த ஆசிரியை உட்பட 3 பேர் கைது
ADDED : ஏப் 02, 2025 06:15 AM

பெங்களூரு : 'உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிடுவேன்' என, தொழிலதிபரிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய, பெங்களூரு பள்ளி ஆசிரியை உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பங்குதாரர்
கர்நாடக மாநிலம், பெங்களூரு மஹாலட்சுமி லே - அவுட்டைச் சேர்ந்தவர் ராகேஷ் வைஷ்ணவ், 34; தொழிலதிபர். இவரது மூன்று குழந்தைகளும், இஸ்கான் கோவில் அருகே, 'பிளே ஸ்கூலில்' படித்தனர்.
பள்ளிக்கு சென்று குழந்தைகளை, 'பிக் அப்' செய்யும் போது, ஆசிரியை ஸ்ரீதேவி, 25, என்பவரின் அறிமுகம், ராகேஷுக்கு கிடைத்தது. இருவரும் அடிக்கடி போனில் பேசினர். பிளே ஸ்கூலை விரிவாக்கம் செய்ய நிர்வாகிகள் பணம் கேட்பதாகக் கூறி, ராகேஷிடம் இருந்து ஸ்ரீதேவி பணம் வாங்கினார்.
பின், தன் பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ராகேஷ், கடனை திருப்பிக் கேட்டுஉள்ளார். 'கடனை திரும்ப தர முடியவில்லை. நீங்கள் வேண்டும் என்றால் பிளே ஸ்கூல் பங்குதாரர் ஆகி விடுங்கள்' என்று கூறிய ஸ்ரீதேவி, பிளே ஸ்கூல் நிர்வாகத்திடம் பேசி, ராகேஷை பள்ளியின் பங்குதாரர் ஆக்கினார். பின், இருவருக்கும் நெருக்கம் அதிகரித்தது.
இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்தனர். ஸ்ரீதேவியிடம் பேசுவதற்காக ராகேஷ் புதிய, 'சிம்' வாங்கினார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் ராகேஷ், ஸ்ரீதேவியிடம் பணத்தை கேட்டு உள்ளார். மனைவி இல்லாத நேரத்தில் ராகேஷ் வீட்டிற்கு வந்த ஸ்ரீதேவி, ராகேஷுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, 50,000 ரூபாயை அங்கிருந்து எடுத்துக் கொண்டார்.
விசாரணை
'நீ கொடுத்த கடனை திரும்ப தர முடியாது. என்னுடன் உல்லாசமாக இருந்து கொள். அதற்கு, 15 லட்சம் ரூபாய் தர வேண்டும்' என்று ஸ்ரீதேவி கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கு ராகேஷ் மறுத்து உள்ளார்.
இதையடுத்து, இருவரும் சேர்ந்திருக்கும் ஆபாச வீடியோவை வெளியிடுவதாகக் கூறி, ஒரு கோடி ரூபாய் கேட்டு ராகேஷை, ஸ்ரீதேவி, அவரது காதலன் சாகர், 28, ரவுடி கணேஷ், 38, ஆகியோர் மிரட்டி உள்ளனர்.
கடந்த மாதம் 18ம் தேதி மஹாலட்சுமி லே - அவுட்டில் இருந்து ராகேஷை மூன்று பேரும் காரில் கடத்திச் சென்றனர். அவரிடம் இருந்து 1.90 லட்சம் ரூபாயை பறித்து கொண்டு, கோரகுண்டேபாளையாவில் இறக்கி விட்டு தப்பினர். இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசில் ராகேஷ் புகார் செய்தார்.
தலைமறைவாக இருந்த ஸ்ரீதேவி, சாகர், கணேஷை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.