ADDED : டிச 05, 2024 07:30 AM
பெங்களூரு: மசாலா தயாரிப்பு உரிமம் கொடுக்க, லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து, லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2018ல், பெங்களூரு மாநகராட்சியின், தெற்கு மண்டல சுகாதாரம், குடும்ப நலத்துறையில், உணவு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவர் உல்லாஸ் கங்கனஹள்ளி. மகேஷ் என்பவர் மசாலா துாள் தயாரிக்கும் தொழில் துவங்க, உரிமம் கேட்டு மாநகராட்சி சுகாதாரத் துறையில் விண்ணப்பித்தார்.
'உரிமம் அளிக்க வேண்டுமானால், 10,000 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும்' என, மகேஷிடம், உணவு பாதுகாப்பு அதிகாரி உல்லாஸ் கங்கனஹள்ளி கேட்டுள்ளார். இதுதொடர்பாக, மகேஷ் அன்றைய ஏ.சி.பி., எனும் ஊழல் தடுப்புப் படையிடம் புகார் அளித்தார்.
ஏ.சி.பி., வகுத்த திட்டத்தின்படி, மகேஷ் லஞ்சம் தருவதாக, அதிகாரி உல்லாஸ் கங்கனஹள்ளியிடம் கூறினார். அவரும் 2018 டிசம்பர் 11ம் தேதி, அனந்தராவ் சதுக்கம் அருகில் உள்ள சுகாதாரப் பிரிவு அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்ட தன் காரின் பின் இருக்கையில் உள்ள நோட்டுப் புத்தகத்தில், பணத்தை வைக்கும்படி கூறினார். அதன்படியே மகேஷும் பணத்தை வைத்தார்.
அப்போது ஏ.சி.பி., அதிகாரிகள் திடீர் சோதனையிட்டு, பணத்தை கைப்பற்றினர். உல்லாஸ் கங்கனஹள்ளியிடம் சோதனை நடத்தியபோது, 90,510 ரூபாய் சிக்கியது. அதன்பின் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கினர். விசாரணையை முடித்து, லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
விசாரணையின்போது, உல்லாஸ் கங்கனஹள்ளி, காரில் இருந்த நோட்டுப் புத்தகத்தில் பணம் வைத்தது பற்றி, தனக்கு தெரியாது. எனவே வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி கோரினார்.
இதை ஏற்காத நீதிபதி, 'காரின் கதவை திறந்து, பின் இருக்கையில் உள்ள புத்தகத்தில் ரூபாயை வைக்கும்படி, குற்றவாளி கூறாமல், புகார்தாரரால் எப்படி கார் கதவை திறந்து பணத்தை வைத்திருக்க முடியும்? சமீப நாட்களாக உயர் மட்டத்தில் இருந்து, கீழ்மட்டம் வரை லஞ்சம் பெறுவது சகஜமாகி விட்டது.
'பொது சேவையில் உள்ளவர்கள், மனித நேயம் இன்றி, சட்டத்தை பற்றிய பயமும் இல்லாமல், ஊழலில் ஈடுபட தங்களின் பதவியை உரிமமாக மாற்றிக் கொண்டது வருத்தமளிக்கிறது. இத்தகைய செயல்கள் நீடிக்க அனுமதி அளித்தால், அது ஜனநாயகத்துக்கு, பயங்கரவாதத்தை விட அதிக அபாயமானது' என கருத்து தெரிவித்தது.
உல்லாஸ் கங்கனஹள்ளி லஞ்சம் வாங்கியதை உறுதி செய்து, அவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, 1.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.