ADDED : மார் 16, 2025 11:07 PM
பீதர்: வெப்பத்தின் தாக்கம் தாங்காமல், ஆறுகள், ஏரிகள், கிணறுகளில் நீச்சலடிக்க செல்லும் இளைஞர்கள், சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன.
கர்நாடகாவில், வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. காலை 8:00 மணிக்கே வெயில் கொளுத்துகிறது. மதிய நேரம் வீட்டில் இருந்து வெளியே தலை காட்டவே முடிவதில்லை. வெயில் தீயாய் சுட்டெரிக்கிறது.
வெப்பத்தில் இருந்து தப்பிக்கும் நோக்கில், ஏரிகள், கால்வாய்கள், ஆறுகள், கிணறுகளில் இளைஞர்கள், சிறார்கள் நீச்சலடிக்க செல்கின்றனர். ஆழம் பற்றி தெரியாமல் நீரில் இறங்கி உயிரிழக்கின்றனர். சுற்றுலாவுக்காக வருவோரும் நீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்துள்ளன.
பீதர் மாவட்டம், சிடகுப்பா தாலுகாவின், விட்டலபுரா கிராமத்தை சேர்ந்த பிரகாஷ், 22, சிவாஜி, 21, ஆகியோர் நண்பர்கள் ஆவர். ஞாயிறு விடுமுறை என்பதால், இவர்கள் நேற்று மதியம் அதே கிராமத்தில் உள்ள கிணற்றில் நீச்சலடிக்க சென்றனர்.
ஆழமான இடத்துக்கு சென்ற பிரகாஷ், நீரில் மூழ்க துவங்கினார். இதை கண்ட சிவாஜி, நண்பரை காப்பாற்ற முயற்சித்த போது, இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
பீதர், ஹலசூரின், கடிகவுடகாவ் கிராமத்தில் வசித்தவர் ஆகாஷ் கன்டெப்பா குங்கே, 23. இவர் நேற்று மதியம் நண்பர்களுடன் ஏரிக்கரைக்கு சென்றார். நீச்சல் தெரியாத நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.