ADDED : டிச 07, 2024 11:04 PM

மருத்துவத்தை பணம் காய்க்கும் தொழிலாக பார்க்கும் இந்த காலத்தில், வெறும் 30 ரூபாய் பெற்றுக் கொண்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு டாக்டர், மைசூரில் இருக்கிறார்.
எந்தத் துறையில் இருந்தாலும், பணம் சம்பாதிப்பது மட்டுமே ஒவ்வொருவரின் நோக்கமாக இருக்கும். குறிப்பாக மருத்துவத் துறை, தற்போது சேவையாக இல்லாமல், தொழிலாக பார்ப்போரே அதிகம்.
தனியார் மருத்துவமனைகள் மட்டுமல்ல, அரசு மருத்துவமனைகளிலும் பணம் பறிக்கின்றனர்.
ஆனால் மைசூரைச் சேர்ந்த டாக்டர் அனந்த பத்மநாப பட், விதி விலக்கானவர். இவர் '30 ரூபாய் டாக்டர்' என்றே பிரசித்தி பெற்றவர்.
டீகே லே - அவுட்டில் வசிக்கும் அனந்த பத்மநாப பட், 24 ஆண்டுகளுக்கு முன்பு கிளினிக் திறந்தார். அன்று முதல் ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்கிறார். ஆரம்பத்தில் வெறும் 10 ரூபாய் பெற்று வந்தார்; இப்போது 30 ரூபாய் பெறுகிறார். ஏழைகளிடம் அதுவும் வாங்குவது இல்லை. இலவசமாகவே சிகிச்சை அளிக்கிறார்.
தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம், அன்புடன் பேசி தைரியம் அளிக்கிறார். சிறியவர்களோ, பெரியவர்களோ நல்ல விதமாக பேசுவதால், அனைவருக்கும் பிடித்தமான டாக்டராக திகழ்கிறார்.
எவ்வளவு பணி நெருக்கடி இருந்தாலும், முகத்தில் புன்னகை மாறுவது இல்லை. இதிலேயே பாதி நோய் போய்விடுகிறது என, பலரும் கூறுகின்றனர்.
கிளினிக்கின் வெளியே பார்வை நேரம் குறித்து, போர்டு வைத்துள்ளார். ஆனால் அதில் குறிப்பிட்டுள்ள, அந்த நேரத்தையும் தாண்டி, நோயாளிகள் வந்தாலும், முகம் சுளிக்காமல் சிகிச்சை அளிப்பது அவரது சிறப்பு.
அதிகாலை 1:00 மணி, 2:00 மணி வரையும் கூட அவரது கிளினிக் திறந்திருக்கும். இவரது சேவை மற்றவர்களுக்கு முன் மாதிரியாக உள்ளது
- நமது நிருபர் -.