300 யூனிட் இலவச மின்சாரம்... சிலிண்டருக்கு ரூ.500 மானியம்; தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய ஹரியானா காங்கிரஸ்
300 யூனிட் இலவச மின்சாரம்... சிலிண்டருக்கு ரூ.500 மானியம்; தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய ஹரியானா காங்கிரஸ்
ADDED : செப் 28, 2024 04:33 PM

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளது.
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டசபைக்கு வரும் அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 8ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
கடந்த முறை 40 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்த பா.ஜ., இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சியை தொடர வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. அதேபோல, கடந்த தேர்தலில் பா.ஜ.,வுக்கு அடுத்தபடியாக 30 இடங்களில் வென்ற காங்கிரஸ், இந்த முறை எப்படியாவது, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று முயன்று வருகிறது.
இந்த நிலையில், ஹரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. பல்வேறு அம்சங்கள் அடங்கிய இந்த தேர்தல் வாக்குறுதியை, காங்கிரஸ் தலைவர் புபேந்தர் சிங் ஹூடா, முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஹரியானா பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் உதை பான் ஆகியோர் வெளியிட்டனர்.
தேர்தல் வாக்குறுதிகள்
* வீடுகளுக்கு தலா 300 யூனிட் மின்சாரம் இலவசம்
* ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.25 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ உதவி
* மகளிருக்கு ரூ.2,000 உரிமைத் தொகை
* கேஸ் சிலிண்டருக்கு ரூ.500 மானியம்
* விவசாய பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம்
* விவசாயிகளுக்கு தனி ஆணையம் மற்றும் மானிய விலையில் டீசல் வழங்கப்படும்
*ஏழை எளிய மக்களுக்கு 4.5 சென்ட் வழங்கப்படும்
* பின்தங்கிய மக்களுக்கு இரு அறைகளுடன் கூடிய வீடு கட்டித் தரப்படும்.
* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்
* 2 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு
*போதை இல்லா மாநிலம் உருவாக்கப்படும்
* பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும்
*முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தவர்களுக்கு ரூ.6,000 ஊக்கத்தொகை, ஆகியவை இடம்பெற்றுள்ளது.