இந்திய மக்களின் உணர்வுக்கு மதிப்பளிப்போம்: சர்ச்சையானதால் பணிந்த நெட்பிளிக்ஸ்
இந்திய மக்களின் உணர்வுக்கு மதிப்பளிப்போம்: சர்ச்சையானதால் பணிந்த நெட்பிளிக்ஸ்
UPDATED : செப் 03, 2024 12:42 PM
ADDED : செப் 03, 2024 12:30 PM

புதுடில்லி: 'IC 814' என்ற வெப் தொடர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 'இந்திய மக்களின் உணர்வுகளுக்கு இனி மதிப்பளிப்போம்' என நெட்பிளிக்ஸ் பதில் அளித்துள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டில்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்திற்கு கடத்திச் சென்றனர்.
அங்கு விமானப் பயணிகளை பிணைக் கைதிகளாக வைத்துக் கொண்டு, இந்திய சிறையில் உள்ள மசூத் அசார் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்தனர். அதன்பேரில், 3 பயங்கரவாதிகளும் ஒப்படைக்கப்பட்ட பிறகு, விமானப் பயணிகளை விடுத்தனர்.
IC 814 வெப் தொடர்
இந்த சம்பவத்தின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு, IC 814 எனும் வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், விஜய் வமர்மா, நஸ்ருதின் ஷா, பங்கஜ் கபூர், அரவிந்த் சாமி, அனுபம் திரிபாதி, தியா மிர்ஸா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களுக்கு ஹிந்துக்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி அமைப்பு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், ஹிந்து பெயரை எப்படி வைக்கலாம் என சமூகவலைதளத்தில் விவாதம் அனல் பறந்தது.
மதிப்பளிப்போம்!
இது தொடர்பாக ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நெட்பிளிக்ஸின் இந்திய உள்ளடக்க தலைவர் மோனிகா ஜெர்கில்லுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அவர் இன்று(செப்.,03) மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர், நெட்பிளிக்ஸ் தரப்பில் வெளியான அறிக்கையில்,'இனி கதையின் கரு முழுமையாக ஆய்வு செய்யப்படும். இந்திய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

