''போராடாவிட்டால் இந்தியா பாகிஸ்தானாக மாறிவிடும்'': மத்திய அமைச்சரின் பேச்சுக்கு காங்., கண்டனம்
''போராடாவிட்டால் இந்தியா பாகிஸ்தானாக மாறிவிடும்'': மத்திய அமைச்சரின் பேச்சுக்கு காங்., கண்டனம்
ADDED : மே 24, 2024 03:25 PM

புதுடில்லி: முஸ்லிம் இடஒதுக்கீட்டை எதிர்த்து ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடாவிட்டால், இந்தியா பாகிஸ்தானாக மாறிவிடும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார். இதற்கு காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ''முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவது ஹிந்துக்கள் மீதான தாக்குதல். ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முஸ்லிம் இடஒதுக்கீட்டை எதிர்த்துப் போராடாவிட்டால், வரும் நாட்களில் இந்தியா பாகிஸ்தானாக மாறிவிடும்'' எனக் கூறியிருந்தார்.
இதற்கு காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: உண்மையில், சோகமான விஷயம் என்னவெனில், பிரிவினையின் பிம்பத்தை பா.ஜ., பிரதிபலிப்பதன் விளைவாக தான் இந்தியா, பாகிஸ்தானாக மாறிவருகிறது. இந்தியாவின் முன்னேற்றத்தில் அனைவரும் உள்ளடக்கி இருப்பதையே நாங்கள் பார்க்க விரும்புகிறோம். அப்படியிருக்கையில், இந்தியா, பாகிஸ்தானாக மாறும் என மத்திய அமைச்சர் பேசுவது நியாயமில்லை. அவரின் பேச்சு பாகிஸ்தானின் பிம்பத்தை பிரதிபலிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.