"அடுத்த 10 வருடங்களுக்கு பிரதமர் மோடி மட்டும் தான்": அடித்து சொல்கிறார் அமித்ஷா
"அடுத்த 10 வருடங்களுக்கு பிரதமர் மோடி மட்டும் தான்": அடித்து சொல்கிறார் அமித்ஷா
ADDED : மார் 07, 2024 04:33 PM

புதுடில்லி: 'அடுத்த 10 வருடங்களுக்கு பிரதமர் மோடி மட்டும் தான் என்று என்னால் சொல்ல முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
இது குறித்து அமித்ஷா கூறியிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் பணிகளை பிரதமர் மோடி சிறப்பாக செய்துள்ளார். பிரதமர் மோடி அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சியில் நீடிப்பார். நம் நாட்டில் ஆற்றல்மிக்க ஜனநாயகம் உள்ளது. 40 ஆண்டுகளாக நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி உழைத்துள்ளார். 14 வருடங்களாக முதல்வராகவும், 9 வருடங்களாக பிரதமராகவும் மோடி பதவி வகித்துள்ளார். அவர் அவர் விடுப்பு எடுத்து பார்த்ததில்லை.
பிரதமர் மோடி காலை 5 மணி முதல் இரவு 1 மணி வரை விடாமுயற்சியுடன் பணியாற்றி வருகிறார். பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. 10 ஆண்டுகளாக மத்தியில் எங்கள் ஆட்சி உள்ளது. ஆனால், 4 அணா கூட ஊழல் செய்தார் என பிரதமர் மோடியை எதிரிகளால் கூட குறை கூற முடியாது. நாங்கள் வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சி செய்துள்ளோம்.
குடியுரிமை திருத்தச் சட்டம்
அனைத்து இந்தியர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் பா.ஜ.,ஆட்சி செயல்பட்டு வருகிறது. 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். லோக்சபா தேர்தலுக்கு முன்பு, குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும்.
இதை யாராலும் தடுக்க முடியாது. இதுதான் யதார்த்தம். மாநிலம் மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், மாநிலத்தின் சட்டங்களும் மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும். மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

