"எங்கள் கூட்டணி அதிக வெற்றி பெறும்": கார்கே நம்பிக்கை
"எங்கள் கூட்டணி அதிக வெற்றி பெறும்": கார்கே நம்பிக்கை
UPDATED : மே 18, 2024 12:03 PM
ADDED : மே 18, 2024 11:41 AM

மும்பை: 'எங்கள் கூட்டணி கட்சிகள் அதிகபட்ச தொகுதிகளில் வெற்றி பெற்று, பா.ஜ.,வை தோற்கடிக்கும்' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நிருபர்களிடம் கார்கே கூறியதாவது:
டில்லியில் 3 தொகுதிகளில் கூட்டணி கட்சி போட்டியிடுகிறது. இது ஜனநாயகம். எதேச்சதிகாரம் அல்ல, பா.ஜ.,வை தோற்கடிக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம். இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் வெளியில் இருந்து ஆதரிப்போம் என மம்தா கூறியுள்ளார்.
நடவடிக்கை
சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடித்துவிடுவர் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுவரை நாங்கள் புல்டோசர் பயன்படுத்தவில்லை. தூண்டுதல் செய்பவர்கள் மீது, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைத்தும் பாதுகாக்கப்படும். 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ ரேஷன் அரிசி வழங்குவதாக பிரதமர் மோடி கூறுகிறார். நாங்கள் ஆட்சி அமைத்த பின், 10 கிலோ வழங்குவோம்.
46 தொகுதிகளில் வெற்றி
மஹாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் இண்டியா கூட்டணி 46 தொகுதிகளில் வெற்றி பெறும். எங்கள் கூட்டணி கட்சிகள் அதிகபட்ச தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ.,வை தோற்கடிக்கும். சதித்திட்டத்தின் அடிப்படையில், மகாராஷ்டிராவில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. இது பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் படி தான் நடக்கிறது. உண்மையான கட்சிகளிடம் இருந்து சின்னம் பறிக்கப்பட்டு, பா.ஜ., வை ஆதரிக்கும் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

