ADDED : செப் 11, 2024 12:11 PM

புதுடில்லி: நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு ஆதரவாக இருப்பதும், தேச விரோத அறிக்கைகளை விடுவதுமே எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் காங்கிரசின் வழக்கமாகி விட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
இது குறித்து 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்ட அமித்ஷா வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு ஆதரவாக இருப்பதும், தேச விரோத அறிக்கைகளை விடுவதுமே எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் காங்கிரசின் வழக்கமாகி விட்டது. தேசிய மாநாடடு கட்சியின் தேச விரோத கொள்கைகளை ஆதரிப்பது, காஷ்மீரில் இட ஒதுக்கீடு குறித்து பிரச்னை எழுப்புவது அல்லது வெளிநாட்டு மண்ணில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பகிர்வது என தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதுடன், நாட்டின் உணர்வுகளையும் ராகுல் புண்படுத்துகிறார்.
பிராந்தியவாதம், மதம் மற்றும் மொழி அடிப்படையில் நாட்டில் பிளவு ஏற்படுத்தும் காங்கிரசின் அரசியலை ராகுல் அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. காங்கிரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையை ராகுல் மீண்டும் வெளிக்காட்டி உள்ளார்.பா.ஜ., இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

