ராமர் கோயில் குறித்து பீஹார் அமைச்சர் மீண்டும் சர்ச்சை கருத்து
ராமர் கோயில் குறித்து பீஹார் அமைச்சர் மீண்டும் சர்ச்சை கருத்து
ADDED : ஜன 08, 2024 11:25 AM

பாட்னா: ராமர் கோயில் குறித்து ஏற்கனவே சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த பீஹார் அமைச்சர் சந்திர சேகர், தற்போது கோயிலுடன் கல்வி, மருத்துவமனையை ஒப்பிட்டு மீண்டும் சர்ச்சையாக பேசியுள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ல் திறந்து வைக்கிறார்.
இந்நிகழ்வு குறித்து பீஹாரில் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் சந்திர சேகர் சமீபத்தில் கூறுகையில், ''ராமர் நம் ஒவ்வொருவருக்குள்ளும், எல்லா இடங்களிலும் இருக்கிறார். அப்படியிருக்கும்போது, அவரைத் தேடி எங்கு செல்வீர்கள்? சமூகத்தில் உள்ள ஒரு சில சதிகாரர்களின் பைகளை நிரப்ப பயன்படுகிறது'' என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார் பீஹார் அமைச்சர் சந்திர சேகர்.
அவர் நேற்று (ஜன.,7) செய்தியாளர்களிடம் கூறியதாவது: உங்களுக்கு காயம் பட்டால் எங்கே செல்வீர்கள், கோயிலுக்கா, மருத்துவமனைக்கா? உங்களுக்கு கல்வி வேண்டும் என்றாலோ, அதிகாரி, எம்எல்ஏ அல்லது எம்பி., ஆக வேண்டும் என்றாலோ கோயிலுக்கு செல்வீர்களா, பள்ளிக்கூடம் செல்வீர்களா? போலி இந்துத்துவா மற்றும் போலி தேசியவாதம் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' எனக் கூறினார். இதற்கு பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.