பயங்கரவாத தாக்குதலால் நமது ஆன்மாக்களை அசைக்க முடியாது: டில்லி குண்டுவெடிப்புக்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம்
பயங்கரவாத தாக்குதலால் நமது ஆன்மாக்களை அசைக்க முடியாது: டில்லி குண்டுவெடிப்புக்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம்
ADDED : நவ 12, 2025 05:02 PM

புதுடில்லி: டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, '' பயங்கரவாத தாக்குதலினால் நமது ஆன்மாக்களை அசைக்க முடியாது,'' எனத் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நேற்று முன்தினம் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள், தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எங்கள் அன்பான நண்பர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும்: நானும், இஸ்ரேல் மக்களும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரவித்துக் கொள்கிறோம். இந்த சோகமான நேரத்தில் இந்தியா உடன் இஸ்ரேல் துணையாக நிற்கிறது.
இந்தியாவும் இஸ்ரேலும் பண்டைய நாகரிகங்கள் கொண்ட நாடுகள், பயங்கரவாதம் அதை தாக்கலாம். ஆனால், நமது ஆன்மாக்களை ஒரு போதும் அசைக்க முடியாது. நமது தேசங்களின் ஒளி நமது எதிரிகளின் இருளைப் போக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஈரான் இரங்கல்
இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டில்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததும், ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பக்காயி, ஈரான் அரசின் இரங்கல் மற்றும் அனுதாபங்களை இந்திய மக்களுக்கும் , பாதிக்கப்பட்டவர்களுக்கும் தெரிவித்துள்ளார். இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். இவ்வாறு அந்தப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

