அமலாக்கத்துறை சம்மனை கண்டு கலக்கம் ஏன்? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
அமலாக்கத்துறை சம்மனை கண்டு கலக்கம் ஏன்? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
UPDATED : பிப் 23, 2024 02:31 PM
ADDED : பிப் 23, 2024 01:59 PM

புதுடில்லி: மணல் குவாரி விவகாரத்தில், கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதில் தமிழக அரசு கலக்கம் அடைவது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோதமாகப் பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 10 மாவட்ட கலெக்டர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறைப் பொறியாளர் திலகம் உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இதனை எதிர்த்து தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் செயலாளர், 5 மாவட்ட கலெக்டர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தமிழக அரசும் சம்மனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் முறையிடப்பட்டது. தமிழக அரசும் ரிட் மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று(பிப்.,23) நீதிபதி பெலா எம் திரிவேதி முன்பு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என வாதிட்டார்.
தொடர்ந்து நீதிபதி, ‛‛ தமிழக அரசு எப்படி ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்? எந்த சட்டத்தின் கீழ் தாக்கல் செய்துள்ளது? கூட்டாச்சி கொள்கைக்கு இது எதிரானது இல்லையா? அமலாக்கத்துறை சம்மனில் மாநில அரசு கலக்கம் அடைந்தது ஏன்? இதில் அரசின் பங்கு என்ன?'' என கேள்வி எழுப்பினார்.
மேலும், ‛‛மாநில அரசின் நலன் மற்றும் எப்படி ரிட் மனு எப்படி தாக்கல் செய்தது என்பது குறித்து மாநில அரசு விளக்க வேண்டும். மாநில அரசு எப்படி பாதிக்கப்பட்டு உள்ளது? ஆரம்ப கட்ட விசாரணைக்கு தடை விதிப்பது குறித்து உச்சநீதிமன்றம் பரிசீலனை செய்யும். ஆனால், அனைத்து கேள்விகளுக்கு பதில் வேண்டும்'' எனக்கூறிய நீதிபதி, தமிழக அரசு மற்றும் அமலாக்கத்துறை விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.