ஒரே வங்கி கிளையில் 35 அக்கவுண்ட்: சைபர் குற்ற மோசடி செய்தவர் மும்பையில் கைது
ஒரே வங்கி கிளையில் 35 அக்கவுண்ட்: சைபர் குற்ற மோசடி செய்தவர் மும்பையில் கைது
ADDED : நவ 21, 2024 09:21 PM

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஒரே கிளையில் 35 அக்கவுண்ட் துவக்கி சைபர் குற்ற மோசடியில் ஈடுபட்டவரை மும்பை போலீசார் இன்று கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது: மஹாராஷ்டிர மாநிலம் ரெய்காட் மாவட்டத்தில் உள்ள கர்ஜட்டை சேர்ந்த அமிர் பெரோஸ் மானியார் என்பவர், பஞ்சாப் நேஷனல் வங்கியின் குர்லா கிளையில், 35 கணக்குகளை துவக்கி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
அமிர் பெரோஸ், வங்கிக்கு தினமும் வெவ்வேறு நபர்களுடன் வந்துகொண்டே இருந்திருக்கிறார். அப்போது ஒரு நாள், வங்கியின் மேலாளர், 'நீங்க ஏன் தினமும் வெவ்வேறு நபர்களோடு இங்கு வருகிறீர்கள்' என கேட்டிருக்கிறார்.
அதற்கு அவர், 'நான் ஏற்றுமதி- இறக்குமதி தொழில் செய்து வருகிறேன். எனது உறவினர்கள 10 பேர் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் எனக்கூறினர். அவர்களுக்கு உதவுவதற்காக நான் வந்தேன்' என்றார்.
அவரிடம் வங்கி கணக்கு விபரம் கேட்கப்பட்டது. அது குறித்து, ஆய்வு செய்யப்பட்டதில், அவரது 5 வங்கி கணக்குகளில், சைபர் குற்ற மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டது. அதில் ஒன்று அவரது வங்கி கணக்கு எனவும் தெரியவந்தது.
தொடர்ந்து மறுநாள் அமிர் பெரோஸ் வங்கி கிளைக்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் விசாரித்ததில், சரியான பதில் கிடைக்கவில்லை. வங்கி கணக்கில் சைபர் குற்ற மோசடி நடந்தது நிரூபணம் ஆனதால், போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அமிர் பெரோஸை கைது செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.