தனியார் சொகுசு பஸ்சில் தீ உயிர் தப்பிய 36 பயணியர்
தனியார் சொகுசு பஸ்சில் தீ உயிர் தப்பிய 36 பயணியர்
ADDED : ஜன 29, 2026 12:31 AM

பெங்களூரு: ஷிவமொக்காவில் இருந்து பெங்களூரு புறப்பட்ட தனியார் 'ஸ்லீப்பர்' பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், 36 பயணியர் காயங் களுடன் உயிர் தப்பினர்.
கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா மாவட்டம், ஹொசநகரில் இருந்து நேற்று முன்தினம் இரவு, 36 பயணியருடன் அன்னபூர்ணா என்ற தனியார் ஸ்லீப்பர் பஸ் பெங்களூருக்கு புறப்பட்டது.
அரசலு கிராமத்தை கடந்து செல்லும்போது, பஸ்சில் இருந்து புகை வருவதை ஓட்டுநர் கவனித்தார். பஸ்சை நிறுத்துவதற்குள் தீப்பிடித்ததால், அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், பஸ்சை சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி நிறுத்தியதுடன், பயணியரையும் எச்சரித்தார்.
பஸ் புறப்பட்டு அரை மணி நேரமே ஆனதால், பயணியர் யாரும் உறங்கவில்லை. இதனால், அனைவரும் அலறியடித்து வெளியே வந்தனர். ஆனாலும், அவர்களுக்கு சிறு சிறு தீக்காயங்கள் ஏற்பட்டன.
இது குறித்து ரிப்பன்பேட்டை போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர்கள், காயமடைந்த அனைவரையும், மருத்துவமனையில் சேர்த்தனர். நீண்ட போராட்டத்துக்கு பின், தீ அணைக்கப்பட்டது. எனினும் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தீப்பிடித்து எரிந்த சொகுசு பஸ். இடம்: ஷிவமொக்கா.

