நாட்டின் 3வது மிகப்பெரிய புலிகள் காப்பகம்; சத்தீஸ்கரில் ஏற்படுத்த மாநில அரசு ஒப்புதல்
நாட்டின் 3வது மிகப்பெரிய புலிகள் காப்பகம்; சத்தீஸ்கரில் ஏற்படுத்த மாநில அரசு ஒப்புதல்
ADDED : ஆக 08, 2024 08:25 AM

சத்தீஸ்கர்: நாட்டின் 3வது மிகப்பெரிய புலிகள் காப்பகத்தை அமைக்க சத்தீஸ்கர் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பொதுநல வழக்கு
கடந்த 2019ம் ஆண்டு சமூக ஆர்வலர் அஜய் துபே என்பவர் சத்தீஸ்கர் மாநில ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில், புலிகள் காப்பகம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் 2012ம் ஆண்டே ஒப்புதல் அளித்து விட்ட நிலையில், மாநில அரசு இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு ஐகோர்ட்டில் நடந்து கொண்டிருக்கும் போதே, கடந்த 2023ல் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான துறை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், மிசோரம், நாகலாந்து, ஜார்க்கண்ட், கோவா, சத்திஸ்கர் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாக எச்சரித்தது.
எண்ணிக்கை சரிவு
குறிப்பாக, சத்தீஸ்கரில் 2014ல் 46ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022ல் 17 ஆக குறைந்து விட்டதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையமும் கூறியிருந்தது. இதனால், புலிகள் காப்பகம் அமைக்கும் விவகாரத்தில் சத்தீஸ்கர் அரசின் பிடி இறுகியது.
இதனிடையே, புலிகள் காப்பகம் தொடர்பான வழக்கு கடந்த ஜூலை 15ம் தேதி விசாரணைக்கு வந்த போது, 4 வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு சத்தீஸ்கர் அரசுக்கு ஐகோர்ட் கெடு விதித்திருந்தது.
ஒப்புதல்
இந்த நிலையில், நேற்று சத்தீஸ்கர் அமைச்சரவைக் கூட்டம் கூடியது. அதில், குரு காஸிதாஸ் நேஷனல் பார்க், தாமோர் பிங்லா சரணாலயம் அமைந்துள்ள மஹேந்திரகர், சிர்மிரி, பரத்பூர், கோரியா, சூரஜ்பூர், பல்ராம்பூர் ஆகிய கிராமங்களைச் சேர்த்து புதிய புலிகள் காப்பகம் உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
3வது மிகப்பெரிய புலிகள் காப்பகம்
மொத்தம் 2,829 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த புலிகள் காப்பகம், இந்தியாவின் 3வது மிகப்பெரிய புலிகள் காப்பகமாகும். புதிதாக உருவாக்கப்படும் இந்தக் காப்பகத்தை உள்ளடக்கும் கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.