இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்: ரோகித், ஜடேஜா சதம் விளாசல்
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்: ரோகித், ஜடேஜா சதம் விளாசல்
UPDATED : பிப் 15, 2024 05:05 PM
ADDED : பிப் 15, 2024 10:40 AM

ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 33 ரன்னுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில் கேப்டன் ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா சதம் விளாசி அணியை மீட்டனர்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. தற்போது தொடர் 1-1 என சம நிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் இன்று (பிப்.,15) ராஜ்கோட்டில் துவங்கியது. இதற்கான இந்திய அணியில் இருந்து 'சீனியர்' கோலி, ராகுல் விலகிய நிலையில், சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜூரல் இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி உள்ளனர்.
'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, 'பேட்டிங்' தேர்வு செய்தார். ரோகித், ஜெய்ஸ்வால் துவக்கம் தந்தனர். ஜெய்ஸ்வால் 10 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த சுப்மன் கில் (0), ரஜத் படிதர் (5) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். 12 ஓவரில் இந்திய அணி 39 ரன்னுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதன் பிறகு ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா, ஜடேஜா இருவரும் அணியை மீட்டனர்.
இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர். கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தினார். 131 ரன்கள் சேர்த்த ரோகித், மார்க்வுட் பந்தில் கேட்சானார். அடுத்து வந்த அறிமுக வீரர் சர்பராஸ் கான், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் கடந்த அவர், 62 ரன்னில் ரன்அவுட்டானார். ஜடேஜாவின் 100வது ரன்னுக்காக ஓடும்போது அவசரப்பட்டு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்து உள்ளது. ஜடேஜா (110), குல்தீப் யாதவ் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

