விழுந்தது 3வது விக்கெட்: பணமில்லாததால் தேர்தலில் இருந்து விலகும் காங்., வேட்பாளர்
விழுந்தது 3வது விக்கெட்: பணமில்லாததால் தேர்தலில் இருந்து விலகும் காங்., வேட்பாளர்
ADDED : மே 04, 2024 05:29 PM

புவனேஸ்வர்: ஒடிசாவில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர், செலவு செய்ய பணம் இல்லாததால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
லோக்சபாவுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனையடுத்து அந்த தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் போட்டியின்றி தேர்வானார். ம.பி., மாநிலம் இந்தூரில் காங்கிரஸ் வேட்பாளர், கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்று பா.ஜ.,வில் இணைந்தார். இந்நிகழ்வுகள் காங்கிரஸ் மேலிடத்திற்கு அதிர்ச்சியை அளித்தது.
இந்நிலையில் 3வதாக ஒடிசா மாநிலம் புரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது, அக்கட்சிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அத்தொகுதி வேட்பாளராக சுசரிதா மொகந்தி என்ற பத்திரிகையாளர் அறிவிக்கப்பட்டார். சொந்த செலவில் தேர்தலை சந்திக்கும்படி, ஒடிசா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய்குமார் கூறியதாக சுசரிதா தெரிவித்தார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன், பொது மக்களிடம் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், எதிர்பார்த்த அளவு பணம் கிடைக்கவில்லை. தேர்தலில் செலவு செய்ய போதுமான பணம் இல்லாததால் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக காங்கிரஸ் மேலிடத்திற்கு சுசரிதா கடிதம் எழுதி உள்ளார்.

