கோவை, நீலகிரி, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களுக்கு புதிய மாஸ்டர் பிளான்!
கோவை, நீலகிரி, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களுக்கு புதிய மாஸ்டர் பிளான்!
ADDED : அக் 16, 2025 06:58 AM

சென்னை: திடீர் வெள்ளம், காட்டுத்தீ, நிலச்சரிவு போன்ற பிரச்னைகளை சமாளிக்கும் வகையில், நீலகிரி, கோவை, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களுக்கு, புதிய 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, யாரும் எதிர்பாராத வகையில், பல்வேறு பேரிடர்கள் ஏற்படுகின்றன. நகர்ப்புற பகுதிகளில் குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்வதால், திடீர் வெள்ளம் ஏற்படுகிறது.
மழை நீர் வடிகால்கள், நீர்வழித்தடங்களின் மொத்த தாங்கு திறனை விட, அதிக அளவுக்கு மழை நீர் வரும்போது வெள்ள பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமவெளி பகுதிகளில் மட்டுமல்லாது, மலைப் பகுதிகளிலும் திடீர் வெள்ள பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதேபோன்று, மலைப்பகுதிகளில் மழைக் காலங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்படுகிறது. தமிழக வனப்பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்படுவது அதிகரித்துள்ளன.
இந்நிலையில், நகர்ப்புற வளர்ச்சி மட்டுமல்லாது, பேரிடர்களை கருத்தில் வைத்து, அதை சமாளிக்கும் வகையில் முழுமை திட்டங்கள் தயாரிக்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்படும் பேரிடர் சம்பவங்களை கருத்தில் வைத்து, அதை சமாளிக்கும் வகையில், முழுமை திட்டங்கள் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கானபணிகள் துவங்கியுள்ளன.
கடந்த, 2016ல், உத்ராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ, 2023ம் ஆண்டு சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், 2024ல் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு ஆகியவை குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவங்களின்போது ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்பதை ஆராய்ந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை சமாளிக்கும் வழிமுறைகள் கண்டறியப்படும். இதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், நெல்லியாளம் பகுதிகள்; கோவை மாவட்டம் வால்பாறை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதிகளுக்கு, புதிய மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட உள்ளது.
பொதுவாக நில வகைப்பாடு வரையறுப்பது, போக்குவரத்து, தொழில் சார்ந்த கட்டமைப்புகளுக்கு நிலம் ஒதுக்குவது என்ற நடைமுறைக்கு அப்பால், புதிய அணுகுமுறையில், இந்த மாஸ்டர் பிளான்கள் தயாரிக்கப்பட உள்ளன.
தனியார் கலந்தாலோசனை மட்டுமல்லாது, நகர்ப்புற திட்டமிடல் தொடர்பான கல்வி நிறுவனங்கள், இதில் ஈடுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.