ADDED : டிச 11, 2024 10:24 PM
புதுடில்லி:டில்லி மெட்ரோ ரயில் பாதையில் கேபிள் திருடிய 11 பேர் கொண்ட கும்பலில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டில்லி மெட்ரோ ரயில் புளூ வழித்தடத்தில், மோதி நகர் மற்றும் கீர்த்தி நகர் ஆகிய நிலையங்களுக்கு இடையே கடந்த 5ம் தேதி, மெட்ரோ ரயில் இயக்கம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டது.
மெட்ரோ நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு நடத்தியதில் ரயில் வழித்தடத்தில் கேபிள் திருடப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய கேபிள்கள் அமைத்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீஸ் இணை கமிஷனர் விஜய் சிங் தலைமையில் போலீசார் வந்து, 500க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
ரயில் பாதையில் கேபிளை அறுத்து திருடிய 11 பேரை அடையாளம் கண்டுபிடித்து, 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 52 மீட்டர் திருடப்பட்ட கேபிள் பறிமுதல் செய்யப்பட்டது. மற்ற 7 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

