ADDED : ஜன 05, 2024 04:07 AM

கர்நாடகாவில் பழங்காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள், ஏராளமாக உள்ளன. இந்த கோவில்கள், பழங்கால கட்டட கலைகளை, தற்போதைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் விதமாக உள்ளது. சாளுக்கிய மன்னர்களின் கட்டட கலையை பற்றி சொல்லும் வகையில், சந்திரமவுலீஸ்வரர் கோவில் கட்டப்பட்டு இருக்கிறது.
வடமாவட்டமான ஹுப்பள்ளி உன்கல்லில் உள்ளன சந்திரமவுலீஸ்வரர் கோவில். இக்கோவில் கி.பி., 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கிறது. சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவிலில், ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்ட, நான்கு முக சிவன் சிலையும் உள்ளது. கோவில் சுவற்றில் பிரம்மன், விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இவை தவிர நடராஜர், விநாயகர், சரஸ்வதி ஆகிய சிலைகளும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. கருவறையில் உள்ள, நான்கு லலிதா பிம்பங்களில் இரண்டில் கஜலட்சுமியும், இரண்டில் சரஸ்வதியும் உள்ளனர். பழங்காலக் கோவில் என்பதால், இந்திய தொல்லியல் துறையினர் பராமரித்து வருகின்றனர். கோவிலின் கட்டட கலைகளை பார்க்கவும், மொபைல் போனில் 'செல்பி' எடுக்கவும் தினமும் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
கோவிலுக்கு அருகில் உள்ள உன்கல் ஏரி, சுற்றுலா தலமாக இருப்பது கோவிலுக்கு பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது. இந்த கோவிலை சுற்றி ஏராளமான பழங்காலக் கோவில்களும் உள்ளன. இதனால், இங்கு வருபவர்கள் மற்ற கோவில்களும் செல்லும் வாய்ப்பு உண்டு.
ஹுப்பள்ளியில் பஸ் நிலையத்தில் இருந்து, பத்து நிமிடங்களில் கோவிலை சென்றடையலாம். கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஹுப்பள்ளிக்கு பஸ், ரயில் சேவை உள்ளது.