பீஹாரில் பட்டாசு தயாரித்த வீட்டில் விபத்து: 4 பேர் பலி
பீஹாரில் பட்டாசு தயாரித்த வீட்டில் விபத்து: 4 பேர் பலி
ADDED : அக் 23, 2026 09:08 PM
பாட்னா: பீஹாரில், பட்டாசு தயாரித்த வீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு பேர் உடல் சிதறி பலியாகினர்.
பீஹாரின் சிவான் மாவட்டத்தில் உள்ள ஆலம்பூர் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில், கடந்த 20 ஆண்டுகளாக பட்டாசு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த கட்டடம், பட்டாசு வியாபாரியான முகமது அமிருதீன் மியான் என்பவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இங்கு வழக்கம்போல், ஏழு பேர் பட்டாசு தயாரிக்கும் பணியில் இன்று (அக்.,23) ஈடுபட்டனர். அப்போது, திடீரென பட்டாசுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின.
இதில், பட்டாசு தயாரித்த கட்டடத்தின் முன்பகுதி இடிந்து விழுந்தது. அடுத்தடுத்து வீடுகள் நிறைந்த பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியேறினர். இந்த விபத்தில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும், மூன்று பேரை காணவில்லை. இடிபாடுகளில் அவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
எனவே, இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சம்பவம் நடந்த கட்டடத்தில் ஏராளமான பட்டாசுகள் மற்றும் அதற்கான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பட்டாசு வெடித்து வருவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். வெடிவிபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
