ADDED : மார் 18, 2024 06:12 AM

தங்கவயல், : தங்கவயல் தொகுதியில் ஒரு பெண் உட்பட நான்கு பேரை, நகராட்சி நியமன உறுப்பினர்களாக கர்நாடக அரசு அறிவித்து உள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு நேற்று முன்தினம் பிற்பகல் அறிவிக்கப்படுவதாக, 15ம் தேதி தகவல்கள் வெளியாயின.
இதனால், பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்த தங்கவயல் நகராட்சி நியமன உறுப்பினர் பட்டியலில், நேற்று முன்தினம் அவசர அவசரமாக கையெழுத்திடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கவயல் நகராட்சிக்கு ஐந்து பேர் நியமன உறுப்பினராக நியமிக்க பட வேண்டும் என்று தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா முன்பே, சிபாரிசு செய்திருந்தார். ஆனால், நான்கு பேர் மட்டும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கான அரசு உத்தரவை, கர்நாடக அரசின் நகர அபிவிருத்தித் துறை செயலர் மஞ்சுநாத், நேற்று முன்தினம் அனுப்பியிருந்தார்.
இதன்படி, மூத்த காங்கிரஸ் உறுப்பினர் ஓ.வி.டேவிட், நகர காங்கிரஸ் துணைத் தலைவரான முன்னாள் கவுன்சிலர் ஆர்.மோகன்ராஜ், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு செயலர் எச்.ஜபருல்லா ஷெரிப், மூத்த காங்கிரஸ் தலைவர் டி.ஜான் மகளும், மகளிர் காங்கிரஸ் பிரமுகருமான ஜே.அம்பிகா ஆகியோர் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுஉள்ளனர்.

