மேல்சபையின் 4 நியமன உறுப்பினர் பதவி: காங்.,கில் 50க்கும் மேற்பட்டோர் போட்டி
மேல்சபையின் 4 நியமன உறுப்பினர் பதவி: காங்.,கில் 50க்கும் மேற்பட்டோர் போட்டி
ADDED : அக் 26, 2024 08:05 AM
பெங்களூரு: பா.ஜ.,விலிருந்து யோகேஸ்வர் ராஜினாமா செய்ததால் காலியான ஒரு இடம் உட்பட, மேல்சபையின் நான்கு இடங்களுக்கு, ஆளுங்கட்சியான காங்கிரசில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவின் மூன்று சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளும், ஆளுங்கட்சியான காங்கிரசும் விறுவிறுப்பாக தயாராகின்றன. இந்த தேர்தல் முடிந்த கையோடு, மேல்சபையின் நான்கு இடங்களுக்கு நடக்கும் தேர்தலுக்கு தயாராக வேண்டியுள்ளது.
மேல்சபையில் அரசு சார்பில், வெவ்வேறு கோட்டாவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்த காங்கிரசின் பிரகாஷ் ராத்தோட், வெங்கடேஷ் ஆகியோரின் பதவிக் காலம், இம்மாதம் இறுதியில் முடிகிறது. ம.ஜ.த.,வின் திப்பேசாமியின் பதவிக் காலம், 2025 ஜனவரியில் முடிவடைய உள்ளது. இம்மூன்று இடங்களும் காங்கிரசுக்கு கிடைக்கும்.
பா.ஜ., சார்பில் மேல்சபைக்கு நியமிக்கப்பட்ட யோகேஸ்வரின் பதவிக் காலம், இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. ஆனால் அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரசுக்கு சென்றுவிட்டார். இவரால் காலியான இடம் உட்பட, மேல்சபையின் நான்கு இடங்கள் காங்கிரசுக்கு கிடைக்கும்.
இந்த இடங்களுக்கு சுதர்ஷன், வினய் கார்த்திக், ராணி சதீஷ், எஸ்.ஆர்.பாட்டீல் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் வரிசை கட்டி நிற்கின்றனர். தங்களுக்கு வாய்ப்பளிக்கும்படி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளாக, முதல்வர் சித்தராமையாவின் அந்தரங்க உதவியாளராக உள்ள, தற்போது முதல்வரின் சிறப்பு அதிகாரியான வெங்கடேஷும், மேல்சபை உறுப்பினர் பதவியை எதிர்பார்க்கிறார்.
முதல்வரிடம் பல ஆண்டு பணியாற்றி, அரசில் உயர் பதவி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம். இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் தேவகவுடா, தம்முடன் பல ஆண்டுகள் இருந்த திப்பேசாமிக்கு, பதவி கொடுத்தார்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனக்கு நெருக்கமான சித்தலிங்கசாமிக்கு, பா.ஜ., சீட் பெற்று தந்து, வருணா தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து போட்டியிட வைத்தார்.
அதேபோன்று, சித்தராமையாவும் தனக்கு நெருக்கமான வெங்கடேஷுக்கு மேல்சபையில் பதவி வழங்கப்படும் வாய்ப்புள்ளது.
சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு, வேட்பாளர்களை தேர்வு செய்வதற்குள், காங்கிரசுக்கு போதும், போதும் என்றானது. அடுத்ததாக மேல்சபைக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். நான்கு இடங்களுக்கு 50க்கும் மேற்பட்டோர் போட்டி போடுவதால், அரசுக்கு பெரும் தலைவலியாக இருக்கும்.