4 வகை தோசை; 2 வகை சட்னி 'உச்' கொட்டி சாப்பிடும் மக்கள்
4 வகை தோசை; 2 வகை சட்னி 'உச்' கொட்டி சாப்பிடும் மக்கள்
ADDED : அக் 05, 2024 05:11 AM

ஹோட்டல் தொழிலுக்கு சராசரியான முதலீடு செய்தால் போதும். ஓரளவு லாபம் கிடைக்கும். புதிய ஹோட்டல் என்றால், வாடிக்கையாளர்களை, 'பிக் அப்' செய்யும் வரை, கொஞ்சம் கடினமாக இருக்கும்.
ஆனால் வியாபாரம் சூடு பிடித்துவிட்டால், நல்ல லாபம் தான்.
அந்த வகையில், கோலாரில் மொபைல் ஹோட்டல் துவங்கி, ஏழு மாதங்களில் வாலிபர் ஒருவர் வெற்றி கண்டுள்ளார்.
கோலாரின் வேம்கல் நகரில் உள்ள அம்பேத்கர் பவன் முன், தினமும் மாலை 6:00 முதல் இரவு 11:00 மணி வரை, ஒரு இடத்தில் கூட்டம் அலைமோதும். மொபைல் ஹோட்டலில் தயாராகும் தோசையின் மனம் அந்த வழியாக செல்வோரை, சுண்டி இழுக்கும்.
ஹோட்டலுக்கு சாப்பிட செல்வோரை, உரிமையாளர் நாகேந்திர சாரி, 'வாங்க... வாங்க...'
என்று அன்புடன் வரவேற்பார். நான்கு வகையான தோசை, இரண்டு வகையான சட்னியுடன், மக்கள் உச் கொட்டி சாப்பிடுவர். 'தோசையும், சட்னியும் அருமையாக உள்ளது' என்று சர்டிபிகேட் கொடுத்தும் செல்வர்.
இதுகுறித்து நாகேந்திர சாரி கூறுகையில், ''எனது மொபைல் ஹோட்டலுக்கு பெயர் இல்லை.
ஆனால் எனது பெயரில் உள்ள சாரியை வைத்து, 'சாரி ஹோட்டல்' என்று மக்கள் அழைக்கின்றனர். தச்சு வேலை செய்தேன்.
சுயதொழில் துவங்க வேண்டும் என்ற ஆசையால், மொபைல் ஹோட்டல் துவங்கினேன்.
''வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் சுவையில், எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டேன்.
லாபம் சம்பாதிப்பது எனது நோக்கம் இல்லை. நல்ல பெயர் சம்பாதித்தால் போதும்,'' என்றார்
- நமது நிருபர் -.