பீஹாரில் தேடப்பட்டு வந்த 4 ரவுடிகள் டில்லி என்கவுன்டரில் சுட்டுக்கொலை: தேர்தலை சீர்குலைக்க சதி செய்தது அம்பலம்
பீஹாரில் தேடப்பட்டு வந்த 4 ரவுடிகள் டில்லி என்கவுன்டரில் சுட்டுக்கொலை: தேர்தலை சீர்குலைக்க சதி செய்தது அம்பலம்
ADDED : அக் 24, 2025 03:46 AM

புதுடில்லி: பீஹாரில் தேடப்பட்டு வந்த நான்கு பிரபல ரவுடிகளை, டில்லி போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.
பீஹாரின் சீதாமர்ஹி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ரஞ்சன் பதக், அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார். அவருடன் பிம்லேஷ் சாஹ்னி, 25, மணிஷ் பதக், 33, அமன் தாக்கூர், 21, ஆகியோரும் சேர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டனர்.
கண்காணி ப்பு ரவுடி ரஞ்சன் பதக் தலைமையில் செயல்பட்டு வந்த இந்த கும்பல், 'சிக்மா' என்ற பெயரில் நம் அண்டை நாடான நேபாளத்திலும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பீஹாரில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் கமிஷனுடன் சேர்ந்து, அம்மாநில போலீசாரும் குற்றப் பின்னணி கொண்டவர்களை கண்காணிக்க துவங்கினர்.
அப்போது, சட்டசபை தேர்தலை சீர்குலைக்க ரஞ்சன் கும்பல் சதித் திட்டம் தீட்டிய தகவல் பீஹார் போலீசாருக்கு கிடைத்தது.
இந்தச் சூழலில் சீதாமர்ஹி மாவட்டத்தில் அடுத்தடுத்து ஐந்து கொலைகளை செய்து விட்டு, ரவுடிகள் நான்கு பேரும் தப்பியோடினர். அவர்களை பிடிக்கும் பணியில் பீஹார் போலீசார் இறங்கியபோது, அனைவரும் டில்லியில் பதுங்கியது தெரியவந்தது.
துப்பாக்கி சூடு இந்நிலையில், டில்லியின் ரோஹினி அருகே நான்கு ரவுடிகளும் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தது. டில்லி போலீசாருடன் இணைந்து, பீஹார் போலீசாரும் அந்த இடத்திற்கு விரைந்தனர்.
போலீசாரை கண்டதும் அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றது. இதைத் தொடர்ந்து, தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் நான்கு பேரும் உயிரிழந்தனர்.

