நீதிமன்றங்கள் தான் அரசியலமைப்பின் காவலர்கள்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பெருமிதம்
நீதிமன்றங்கள் தான் அரசியலமைப்பின் காவலர்கள்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பெருமிதம்
ADDED : நவ 26, 2025 01:28 PM

புதுடில்லி: நீதிமன்றங்கள் அரசியலமைப்பின் காவலர்கள் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு தினத்தையொட்டி, டில்லியில் உச்சநீதிமன்ற பார் கவுன்சில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்து கொண்டு கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேசியதாவது;இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பிறகு நான் உரை நிகழ்த்தும் முதல் பொது நிகழ்ச்சியாகும். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்த மைல்கல்லை அடைய அரசியலமைப்புத் தினத்தை விட மிகவும் பொருத்தமான நிகழ்வை நான் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதிலும், நமது அரசியலமைப்பின் புனிதத்தன்மையைப் பாதுகாப்பதிலும் வழக்கறிஞர்களுக்கு முக்கிய பங்குண்டு. நீதிமன்றங்கள் அரசியலமைப்பின் காவலர்கள். வழக்கறிஞர்கள் நமது பாதையின் விளக்குகள் என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆரம்ப காலம் முன்பே உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் ஆகிய அரசியலமைப்பு மதிப்புகளைப் பேணுதல், பராமரித்தல் மற்றும் ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது, இவ்வாறு அவர் கூறினார்.

