முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்கு : முதலிடத்தில் தெலுங்கானா காங். முதல்வர் ரேவந்த் ரெட்டி
முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்கு : முதலிடத்தில் தெலுங்கானா காங். முதல்வர் ரேவந்த் ரெட்டி
ADDED : ஆக 23, 2025 08:03 AM

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள மாநில முதல்வர்களில் 40 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரதமரே ஆனாலும் கிரிமினல் குற்ற வழக்கில் கைதாகி , 30 நாட்கள் சிறையில் இருந்தால் தானாக பதவி பறிபோகும் வகையில் புதிய மசோதா, பார்லியில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். நேற்று (ஆக. 22) பீஹாரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சிறையில் இருந்து கொண்டு இனி யாரும் ஆட்சி அதிகாரத்தை நடத்த முடியாது. அதற்காகவே புதிய மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது என்றார்.
இந்நிலையில் ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வில் கூறியுள்ளதாவது, நாடு முழுதும் உள்ள மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களில் 40 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிக கிரிமினல் வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். இவர் மீது 89 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 72 -க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்திய தண்டனை சட்டத்தின் (புதிய சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா ) கீழான தண்டனைக்குரிய குற்ற வழக்குகள் ஆகும். இரண்டு குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவருக்கு அடுத்தபடியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது 47 வழக்குகள் உள்ளன. இதில் 11 வழக்குகள் இந்திய தண்டனை சட்டத்தின் கீழான (புதிய சட்டமான பாரதிய நிாயாய சன்ஹிதா ) தண்டனைக்குரிய வழக்குகள் உள்ளன.
ஆந்திர தெலுங்கு தேசம் முதல்வர் மீது 19 வழக்குகள், கர்நாடகா காங்., முதல்வர் சித்தராமையா மீது 13 கிரிமினல் வழக்குகள், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது 5 வழக்குகள், மஹாராஷ்டிரா பா.ஜ., முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹிமாச்சல் முதல்வர் சுக்வீந்தர்சிங் சுகு, ஆகியோர் மீது 4 வழக்குகள், கேரளா முதல்வர் பினராயி விஜயன் மீது 2 கிரிமினல் வழக்குகள், பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான் மீது 1 வழக்கு நிலுவையில் உள்ளன.
இவற்றில் கொலை, கொலை முயற்சி, ஆட்கடத்தல், ஊழல், என மிகவும் கடுமையான குற்ற வழக்குகள் கூட உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.