சிவகங்கையில் அரசு பஸ்கள் மோதி 11 பேர் பலி; பிரதமர் மோடி வேதனை
சிவகங்கையில் அரசு பஸ்கள் மோதி 11 பேர் பலி; பிரதமர் மோடி வேதனை
ADDED : டிச 01, 2025 10:38 AM

சென்னை: சிவகங்கையில் இரண்டு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், 11 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே கும்மங்குடியில் இரண்டு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் பஸ் டிரைவர், 9 பெண்கள் உட்பட 11 பேர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக பலியாயினர். மேலும் 40 பேர் பலத்த காயமுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் சிவகங்கையில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஏற்கனவே விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு, தலா 3 லட்சம்; பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு, தலா ஒரு லட்சம்; லேசான காயமடைந்து, சிகிச்சை பெறுவோருக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

