பெங்., மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் 43 பேருக்கு சிக்கல்
பெங்., மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் 43 பேருக்கு சிக்கல்
ADDED : ஜன 10, 2025 11:11 PM
பெங்களூரு: ஆழ்துளை கிணறு அமைப்பதில் நடந்த முறைகேடு தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர்கள் 43 பேரிடம் விசாரிக்க, அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
பெங்களூரு மாநகராட்சி சார்பில், 2016 முதல் 2019 வரை ஆழ்துளை கிணறு அமைப்பதில் 960 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறையில் 2021ல் பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் புகார் செய்தார்.
இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரிக்கிறது. கடந்த ஆண்டு 25 மாநகராட்சி அதிகாரிகளுக்கு, நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால் அதிகாரிகள் யாரும் சரியான பதில் அளிக்கவில்லை.
கடந்த 7ம் தேதி, மாநகராட்சி அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
மாநகராட்சி தலைமை இன்ஜினியர் பிரஹலாத் உட்பட சில அதிகாரிகள் அலுவலகங்களில் இருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் ஆழ்துளை கிணறு அமைப்பதில் நடந்த முறைகேட்டில் முன்னாள் கவுன்சிலர்கள் 43 பேருக்கு தொடர்பு இருப்பதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. இதனால் அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
யஷ்வந்த்பூர், பேட்ராயனபுரா, ஆர்.ஆர்.நகர், பொம்மனஹள்ளி ஆகிய தொகுதிகளில் தான் அதிக முறைகேடு நடந்ததும் தெரிய வந்துள்ளது.

