பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி; மத்திய அரசு உதவி செய்யும் என பிரதமர் மோடி உறுதி
பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி; மத்திய அரசு உதவி செய்யும் என பிரதமர் மோடி உறுதி
UPDATED : மார் 01, 2025 08:56 PM
ADDED : மார் 01, 2025 11:12 AM

டேராடூன்: உத்தரகண்டில் பனிச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
உத்தரகண்டில் சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் பகுதியில் இருந்து, 3 கி.மீ., தொலைவில் மானா என்ற கிராமம் உள்ளது. திபெத் எல்லையை நோக்கி நம் ராணுவத்தினர் செல்லும் பாதையில் உள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியில், நேற்று காலை வழக்கம் போல், பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலை அமைப்பின் 57 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென அந்த பகுதியில் பலத்த மழை பெய்ததுடன், பனிச்சரிவும் ஏற்பட்டது. இதில், தொழிலாளர்கள் சிக்கினர். இது குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர், சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். பனிச்சரிவில் சிக்கிய 47 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி தொலைபேசியில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பேசி உள்ளார். பனிச்சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்க மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, எந்த அவசரநிலையையும் சமாளிக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.
நேரில் ஆய்வு
உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சம்பவ இடத்தில் ஹெலிகாப்டரில் சென்று மீட்பு பணிகளை ஆய்வு செய்தார். அவர், 'விரைந்து மீட்பு பணி மேற்கொள்ள வேண்டும்' என மீட்பு படை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.