'ஹனி டிராப் ' வலையில் சிக்கிய 48 கர்நாடக அரசியல்வாதிகள்: அமைச்சர் புகாரால் பரபரப்பு
'ஹனி டிராப் ' வலையில் சிக்கிய 48 கர்நாடக அரசியல்வாதிகள்: அமைச்சர் புகாரால் பரபரப்பு
ADDED : மார் 20, 2025 10:13 PM

பெங்களூரு: '' கர்நாடகாவில் ' ஹனிடிராப் ' வலையில் 48 அரசியல்வாதிகள் சிக்கி உள்ளனர்'', சட்டசபையில் மாநில அமைச்சர் கேஎன் ராஜன்னா புகார் கூறினார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
சட்டசபையில் அவர் பேசியதாவது: ஒன்று அல்ல இரண்டு அல்ல. இந்த பென்டிரைவ்கள் மற்றும் 'சிடி'க்களுக்கு 48 பேர் சிக்கி உள்ளனர். இதில் ஆளுங்கட்சியினர் மட்டும் அல்லாமல், எதிர்க்கட்சியினரும் அடக்கம்.சாதாரண அரசியல்வாதிகள் மட்டுமல்ல, முக்கிய அரசியல்வாதிகளும் சிக்கி உள்ளனர்.
கர்நாடகாவை 'சிடி'க்கள் மற்றும் பென்டிரைவ்களின் தொழிற்சாலை என பலரும் அழைக்கின்றனர். இது தீவிரமான குற்றச்சாட்டு. இந்த 'ஹனிடிராப்' வலையில் தும்குருவை சேர்ந்த இரண்டு அதிகாரம் மிக்க அமைச்சர்களும் சிக்கி உள்ளனர் என தகவல்கள் வந்தன. அதில், ஒருவன் நான். மற்றொருவர் பரமேஸ்வரா. இந்த விவகாரத்தில் பல விஷயங்கள் வெளி வருகிறன. அதற்கு பதிலளிக்க துவங்கினால், அது சரியாக இருக்காது.
இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என உள்துறை அமைச்சரிடம் புகார் அளிக்க உள்ளேன். இதற்கு பின்னால் இருக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் யார்? அனைத்து விஷயமும் வெளியே வர வேண்டும். மக்கள் அறிந்து கொள்வது முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.
காங்., தலைவர்கள் மவுனம் கலைப்பு
மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சதிஷ் ஜர்கோலி கூறுகையில், '' அமைச்சர் ஒருவரை ' ஹனி டிராப்' முறையில் சிக்க வைக்க இரண்டு முறை முயற்சி நடந்தது. ஆனால், அவை வெற்றி பெறவில்லை. இப்படி நடப்பது கர்நாடகாவில் முதல்முறை அல்ல. அரசியலில் இது போன்ற செயல்களுக்கு இடமில்லை. ஆனால், சிலர் இதனை தங்களது முதலீடாக பயன்படுத்துகின்றனர். இதற்கு முடிவு கட்ட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அமைச்சரை புகார் அளிக்க கேட்டுக் கொண்டுள்ளோம். போலீசில் புகார் அளிக்கும்போது தான் இதுபோன்ற நிகழ்வுகள் ஏன் நடக்கின்றன என அறிய முடியும். யார் பின்னால் இருக்கிறார்கள் என கண்டுபிடிக்க முடியும். இது குறித்து முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் விவாதிப்போம். இந்த விவகாரம் கட்சிக்கு அப்பாற்பட்டது. அனைத்து கட்சிகளுக்கும் நடந்துள்ளது என்றார்.
துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறுகையில், ' இந்த விவகாரத்தில் யாரேனும் கைது செய்யப்பட்டு உள்ளனரா என தெரியாது. விசாரணை நடக்கட்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கூறுகையில், இந்த குற்றச்சாட்டு குறித்து தெரியாது. சம்பந்தப்பட்ட துறையிடம் தகவல் கேட்கப்பட்டு உள்ளது. இதுவரை யாரும் கூறவில்லை. இது குறித்து பல யூகங்கள் சென்று கொண்டு உள்ளன. துறையில் இருந்து தகவல் பெற்ற பின் அனைத்தையும் கூறுகிறேன் என்றார்.
விசாரணை கோரும் பா.ஜ.,
இந்த விவகாரம் குறித்து பா.ஜ.,வைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோகா கூறுகையில், 'ஹனிடிராப்' விவகாரம் குறித்து பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். இதனை தீவிரமாக எடுத்து கொள்வதுடன், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சர் விளக்க வேண்டும் என்றார்.
பா.ஜ., மூத்த தலைவர் சிடி ரவி கூறுகையில், மூத்த அமைச்சர் சதீஷ் ஜர்கோலி, இது போன்ற குற்றச்சாட்டை கூறும்போது அதில் உண்மை இருக்கும். இதற்கு பின்னால் இருப்பது யார். நிதியுதவி செய்வது யார் என கண்டுபிடிக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டை சாமானிய மனிதன் கூறவில்லை. காங்கிரஸ் அமைச்சர் கூறுகிறார். இதனால், சிறப்பு குழு அமைத்து விசாரிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேணடும். எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தை புறக்கணிக்கக்கூடாது என்றார்.
முதல்வரிடம் புகார்
இதனிடையே, இந்த விவகாரம் முதல்வர் சித்தராமையா அலுவலகத்தை எட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சர், நேரில் சென்று சித்தராமையாவை சந்தித்து வாய் மொழியாக புகார் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதென்ன 'ஹனி டிராப்'
அரசியல்வாதிகளுக்கு பெண்களை விட்டு வீடியோ அழைப்பில் ஆபாசமாக பேசச் செய்வது, அந்த வீடியோ அழைப்பை பதிவு செய்து வைத்துக் கொண்டு மிரட்டுவது போன்ற செயல்கள், கர்நாடகாவில் தொடர்ந்து நடக்கின்றன. இதைத்தான் 'ஹனி டிராப்' செய்து மிரட்டுவதாக, அமைச்சர் சட்டசபையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.