காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடல்; மாநில அரசு நடவடிக்கை
காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடல்; மாநில அரசு நடவடிக்கை
ADDED : ஏப் 29, 2025 11:28 AM

ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 48 சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடுவதாக  அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது பைசரன் பள்ளத்தாக்கு பகுதி. இது சுற்றுலா பயணிகளால் விரும்பப்படும் பகுதியாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சுற்றுலாத்துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது தான் சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சுற்றுலா தளங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் அரசு காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்களை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்திருக்கிறது. இந்த 48 இடங்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளன அல்லது பாதிக்கப்படக்கூடியதாக கருதப்படும் பகுதிகளில் அமைந்துள்ளன என்பதால் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பகுதிகளில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூத்பத்ரி, யூஸ்மார்க், கௌசர்நாக், தௌசிமைதான், அஹர்பால், பங்கஸ், கரிவான் டைவர் சண்டிகம், பங்கஸ் பள்ளத்தாக்கு, ராம்போரா, ராஜ்போரா உள்ளிட்ட 48 சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. தற்போது சுற்றுலாவுக்கு அனுமதியுள்ள 39 இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

