பொறியாளர் தாறுமாறாக ஓட்டிய கார் மோதி 5 பேர் உயிரிழப்பு
பொறியாளர் தாறுமாறாக ஓட்டிய கார் மோதி 5 பேர் உயிரிழப்பு
ADDED : அக் 26, 2025 02:07 AM

ஆக்ரா: மது போதையில் பொறியாளர் அதிவேகமாக ஓட்டி வந்த கார் மோதி, ஐந்து பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காரை பொதுமக்கள் அடித்து நொறுக்கி, தப்பி ஓட முயன்ற பொறியாளரையும் உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் அன்ஷு குப்தா,40. நொய்டாவில் உள்ள தனியார் நிறுவன பொறியாளர். தீபாவளி கொண்டாட ஆக்ராவுக்கு வந்திருந்தார். நேற்று முன் தினம் இரவு, நண்பர்களுடன் மது அருந்திய அன்ஷு குப்தா காரில் வீட்டுக்கு சென்றார்.
நியூ ஆக்ரா போலீஸ் ஸ்டேஷன் அருகே அதிவேகமாக காரை ஓட்டி வந்த போது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், பாதசாரிகள் மீது மோதியது.
இந்த விபத்தில் பாப்லி,33, பானு பிரதாப்,25, கமல்,23, கிரிஷ்,20, பந்தேஷ்,21, ராகுல் மற்றும் கோலு ஆகிய ஏழு பேர் பலத்த காயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஏழு பேரும், சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ராகுல் மற்றும் கோலு ஆகிய இருவரைத் தவிர மற்ற ஐந்து பேரும் இறந்து விட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர். இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையில், காரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள், தப்பி ஓட முயன்ற அன்ஷு குப்தா சரமாரியாக உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், குப்தாவை கைது செய்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது.
விபத்தில் உயிரிழந்த பானு பிரதாப் தனியார் நிறுவன ஊழியர். நண்பர்களான கமல் மற்றும் கிரிஷ் ஆகிய இருவரும் தீபாவளி விடுமுறை முடிந்து டில்லிக்கு நேற்று புறப்பட திட்டமிட்டு இருந்தனர்.

