ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடித்துக் கொலை; உ.பி.யில் பயங்கரம்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடித்துக் கொலை; உ.பி.யில் பயங்கரம்
ADDED : ஜன 10, 2025 07:17 AM

மீரட்: உத்தரபிரதேசத்தில் 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீரட்டின் லிசாரி கேட் பகுதியைச் சேர்ந்த ஒரு வீட்டில் 3 குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் வசித்து வந்தனர். கடந்த புதன்கிழமை (ஜன.,08) மாலை முதல் அவர்களின் நடமாட்டம் இல்லை, வீட்டின் உள்பகுதி பூட்டியே கிடந்துள்ளதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், அங்கு வந்த போலீசார் கதவை திறக்க முயன்றனர். ஆனால், கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தால், மேற்கூரை வழியாக போலீசார் உள்ளே சென்றனர். அப்போது, உயிரிழந்த 5 பேரின் தலையிலும் பலத்த காயம் இருந்தது. 10 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகளும் ரத்த காயங்களுடன், படுக்கையில் கிடந்தனர். மேலும், அவர்களின் பெற்றோர் தலையில் பலத்த காயத்துடன் தரையில் கிடந்தனர்.
அவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது; உயிரிழந்தவர்களின் தலையில் பலத்த காயம் உள்ளது. யாரோ, பயங்கரமான ஆயுதங்களை வைத்து தாக்கியிருக்க வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே, முழுவிபரம் தெரிய வரும், எனக் கூறினர்.