ADDED : அக் 22, 2024 01:39 AM
மும்பை, மஹாராஷ்டிரா - சத்தீஸ்கர் மாநில எல்லையான கட்சிரோலி மாவட்டத்தில் அமைந்துள்ள கோப்ரி வனப்பகுதியில் நக்சல் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த பகுதியில் மாவட்ட ரிசர்வ் படையினருடன், எல்லை பாதுகாப்புப் படையினர் உட்பட மத்திய பாதுகாப்பு படையினர் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து, அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், நக்சல் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சம்பவ இடத்தில் நக்சல்கள் பயன்படுத்திய ஏ.கே., 47 ரக துப்பாக்கிகள் உட்பட ஏராளமான ஆயுதங்கள், வெடி பொருட்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
தாக்குதல் சம்பவம் அரங்கேறிய சுற்றுவட்டார பகுதிகளில், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டு அந்த பகுதி முழுதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.