ADDED : அக் 27, 2024 11:05 PM

பெல்லந்துார்: கணவரை கொன்றுவிட்டு, யாரோ கொலை செய்ததாக அழுது நாடகமாடிய மனைவி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு, பெல்லந்துாரின் போகனஹள்ளி அருகில் உள்ள நீலகிரி தோப்பில், இம்மாதம் 14ம் தேதி, அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டிருந்தார். தகவலறிந்து, அங்கு வந்த பெல்லந்துார் போலீசார், உடலை மீட்டு விசாரணையை துவக்கினர்.
கொலையானது திப்பேஷ், 30, என்பதை கண்டுப்பிடித்தனர். அதன்பின் விசாரணையை தீவிரப்படுத்தியபோது, அவரை, மனைவியே கள்ளக்காதலன் மூலமாக கொன்றது அம்பலமானது.
போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பல்லாரியை சேர்ந்தவர் திப்பேஷ். இவர் தன் மனைவி நாகரத்னா, 25, இரண்டு குழந்தைகளுடன் பெங்களூரின் போகனஹள்ளியில் தொழிலாளர்கள் ஷெட்டில் வசித்தார். தம்பதி, தனியார் நிறுவனங்களில் தோட்ட வேலை செய்தனர்.
நாகரத்னா, தன் அக்காவின் கணவர் ராம், 35, என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதை அறிந்த திப்பேஷ், மனைவியை கண்டித்தார். தன்னை கணவர் இம்சிக்கிறார்; அவரை கொலை செய்துவிட்டு, தன்னை அழைத்துச் செல்லும்படி, ராமிடம் நாகரத்னா கேட்டுக் கொண்டார்.
இதன்படி ராமும், தன் கூட்டாளிகளுடன் இம்மாதம் 14ம் தேதி திப்பேஷின் கழுத்திலும், மர்ம உறுப்பிலும் உதைத்துக் கொலை செய்து, சடலத்தை நீலகிரி தோப்பில் வீசிவிட்டுத் தப்பினர்.
இவரது உடலை பார்த்த அப்பகுதியினர், நாகரத்னாவுக்கு தகவல் கூறினர். அதன்பின் நீலகிரி தோப்புக்கு ஓடி வந்த அவர், யாரோ கணவரை கொலை செய்துவிட்டனர் என, கதறி அழுது நாடகமாடினார். போலீஸ் நிலையத்திலும், இதுபோன்று நாடகமாடி புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், கொலை ரகசியத்தை கண்டுபிடித்தனர். நாகரத்னா, ராம், சசிகுமார், சின்னா, சுரேஷ் ஆகியோரை நேற்று முன் தினம் கைது செய்தனர்.