ADDED : செப் 21, 2024 10:16 PM
சண்டிகர்:ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சோனிபட்டில் 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஹரியானா மாநிலத்தின் 90 சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 5-ம் தேதி ஓட்டுப்பதிவும் 8-ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது. ஆகஸ்ட் 16ம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது.
ஆளும் பா.ஜ., பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி களத்தில் நிற்பதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சோனிபட் அருகே கோஹானா பைபாஸ் ரோட்டில் காரில் இருந்து 50 லட்சம் ரூபாயை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.
அந்தக் காரில் வந்த நபர், உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் ஒரு இடத்தை விற்று பணத்தை எடுத்த் வருவதாக கூறினார். ஆனால் அதற்கான எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. அவர் நொய்டாவில் இருந்து ஜிந்த் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இதுகுறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்த போலீசார், அரசு கருவூலத்தில் பணத்தை ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கருவூலத்தில் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அந்த நபரிடம் அறிவுறுத்தினர்.