பழைய வாகனத்தை மாற்றினால் சாலை வரி 50% தள்ளுபடி: சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டம்
பழைய வாகனத்தை மாற்றினால் சாலை வரி 50% தள்ளுபடி: சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டம்
ADDED : ஜன 28, 2025 03:53 AM

புதுடில்லி: காற்று மாசை ஏற்படுத்தும் பழைய வாகனங்களை கைவிட ஊக்குவிக்கும் நோக்கில், புதிய வாகனம் வாங்கும்போது, சாலை வரியில் தள்ளுபடியை இரட்டிப்பாக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
'பாரத் - 2' வகை பழைய வாகனத்தை உடைப்புக்கு அளித்து, புதிய வாகனம் வாங்கினால், தற்போது சாலை வரியில் 25 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. வர்த்தக வாகனத்துக்கு 15 சதவீத தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது.
இதை 50 சதவீதமாக அதிகரிப்பதன் வாயிலாக, பழைய வாகனங்களை கைவிட மேலும் பலர் முன்வருவர் என சாலை போக்குவரத்து அமைச்சகம் கருதுகிறது.
பாரத் -2, வகை மற்றும் அதற்கு முந்தைய தனிநபர், வர்த்தக வாகனங்களை மாற்றி, புதிய வாகனம் வாங்குவோருக்கு, ஒருமுறை செலுத்தும் சாலை வரியில் 50 சதவீத தள்ளுபடி வழங்குவதற்கான வரைவு அறிவிக்கையை கடந்த 24ம் தேதி அமைச்சகம் வெளியிட்டுஉள்ளது.
பழைய வாகன உடைப்புக்கு தற்போது 17 மாநிலங்களில் மொத்தம் 60 மையங்கள் செயல்படுகின்றன. இதையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக, சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.