சபரிமலை பெருவழி பாதையில் தினமும் 500 பேருக்கு 'பாஸ்'
சபரிமலை பெருவழி பாதையில் தினமும் 500 பேருக்கு 'பாஸ்'
ADDED : நவ 29, 2025 03:39 AM

சபரிமலை: “எருமேலியில் இருந்து பெருவழிப்பாதை வழியாக வரும் பக்தர்கள், 500 பேருக்கு தினமும், 'ஸ்பாட் புக்கிங் கூப்பன்' வழங்கப்படும்,” என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
அனுமதிக்கப்படாத காட்டுப்பாதைகள் வழியாக வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். இப்படிப்பட்ட பாதைகளில் பக்தர்கள் வரவில்லை என்பதை போலீஸ் உறுதிப்படுத்தும்.
பக்தர்கள் வருகை குறையவில்லை. தேவையான அரவணை ஸ்டாக் உள்ளது. ஆன்லைன் முன்பதிவு கிடைக்காமல் பெருவழிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்காக முக்குழியில் தினமும் 500 பேருக்கு, 'ஸ்பாட் புக்கிங் கூப்பன்' வழங்கப்படும்.
இதை பெறும் பக்தர்கள் வழக்கமான பாதையில் மட்டுமே பயணித்து பம்பை வந்து சன்னிதானத்துக்கு செல்ல வேண்டும்.
சபரிமலை சன்னிதானத்தில் நடக்கும் அன்னதானத்தில், மதியம் பாயசத்துடன் கூடிய விருந்து வழங்கும் திட்டம் டிச., 2 முதல் துவங்கும். சோறு, பருப்பு, சாம்பார், அவியல், துவரன், பப்படம், ஊறுகாய், பாயசம் என குறைந்தபட்சம் ஏழு வகை உணவுகள் இருக்கும்.
மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை இது வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான பாயசம் உண்டு. ஸ்டீல் பிளேட், கப்புகள் இதற்காக பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

