ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் தொகைக்காக 'டம்மி' உடலை எரிக்க முயன்ற இருவர் கைது
ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் தொகைக்காக 'டம்மி' உடலை எரிக்க முயன்ற இருவர் கைது
ADDED : நவ 28, 2025 11:50 PM

ஹபூர்: உத்தர பிரதேசத்தில், இன்சூரன்ஸ் தொகை 50 லட்சம் ரூபாயை மோசடியாக பெற, இறந்த உடலைப் போல் இருந்த, 'டம்மி' பொம்மையை எரிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
உ.பி.,யின் ஹபூரில் கங்கை நதிக்கரையோரம் உள்ள படித்துறையில், இறந்தவர்களின் உடல்களுக்கு சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்படுவது வழக்கம்.
நாடகம்
இங்கு, ஹரியானாவைச் சேர்ந்த நால்வர் நேற்று முன்தினம் ஒரு உடலை எடுத்து வந்து தகனம் செய்ய முயன்றனர். அவர்களின் நடவடிக்கை, அங்கு பணியில் இருந்த மாநகராட்சி ஊழியர் நிதினுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நான்கு பேரிடம் அவர் கேள்வி எ ழுப்பியதுடன், 'பிளாஸ்டிக்' கவரில் முழுமையாக சுற்றப்பட்டு இருந்த உடலை பார்க்க முயன்றார்.
உடலை எடுத்து வந்தவர்கள், இறந்தவரின் முகத்தை காட்ட மறுத்ததுடன், நிதினுடன் வாக்குவாதம் செய்தனர்; உடலை எரிக்கும்படியும் அவசரபடுத்தினர். அப்போது, உடலில் போர்த்தியிருந்த பிளாஸ்டிக் கவரை நிதின் வலுக்கட்டாயமாக நீக்கினார்.
அப்போது, மனித உடலுக்கு பதில், துணிக் கடைகளின் முகப்புகளில் வைக்கப்பட்டிருக்கும் பொம்மை, மனித உடல்போல் எடுத்து வரப்பட்டது தெரிந்தது. இது குறித்து கேட்டபோது, டில்லி மருத்துவமனையில் மனித உடலுக்கு பதில், பொம்மையை கொடுத்துள்ளதாக கூறி அவர்கள் நாடகம் ஆடினர்.
இதனால் சந்தேகமடைந்த நிதின் மற்றும் அப்பகுதியினர், டம்மி உடலுடன் வந்த நால்வரை பிடிக்க முயன்றனர். அதில் இருவர் தப்பிய நிலையில், இருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் டில்லியைச் சேர்ந்த கமல் சோமானி மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் குரானா என தெரியவந்தது.
இன்சூரன்ஸ் தொகை 50 லட்சம் ரூபாயை பெற, அவர்கள் டம்மி உடலை எரிக்க முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
டில்லி கைலாஷ்புரியைச் சேர்ந்தவர், கமல் சோமானி. இவர், அப்பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். வியாபாரம் நடத்த பல இடங்களில் கடன் வாங்கிய நிலையில், கடன் கொடுத்தவர்கள் கமல் சோமானிக்கு நெருக்கடி கொடுத்தனர்.
விசாரணை
இதிலிருந்து தப்ப திட்டமிட்ட அவர், தன் கடையில் ஏற்கனவே பணியாற்றிய அன்சூல் குமாரின் ஆதார் மற்றும் பான் அட்டையை பயன்படுத்தி, சில மாதங்களுக்கு முன், 50 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு ஒன்றை எடுத்தார்.
இதற்கான மாதாந்திர தொகையையும் செலுத்தி வந்தார். அன்சூல் இறந்ததாக கூறினால், முழு பாலிசி தொகை கிடைக்கும் என்பதால், தன் கடையில் இருந்த பொம்மையை எடுத்துவந்து உத்தர பிரதேச கங்கை நதி படித்துறையில் கமல் சோமானி எரிக்க முயன்றார்.
அன்சூல் உடல் எரிக்கப்பட்டதாக சான்றிதழ் பெற்று, அதன் வாயிலாக 50 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பணத்தை அபகரிக்கவும் திட்டமிட்டிருந்தார். உடலை எரிக்க, தன் நண்பர்களுடன் வந்ததை அவர் ஒப்புக்கொண்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஹரியானாவில் வசிக்கும் அன்சூலை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். தான் உயிருடன் இருப்பதாகவும், தனக்கும், இந்த மோசடிக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் உ.பி., போலீசார், தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.

