120 அடி உயரத்தில் சாகச விருந்து: அந்தரத்தில் சிக்கிய குடும்பம் மீட்பு
120 அடி உயரத்தில் சாகச விருந்து: அந்தரத்தில் சிக்கிய குடும்பம் மீட்பு
ADDED : நவ 28, 2025 11:40 PM

மூணாறு: சாகச சுற்றுலா கிரேனில், 120 அடி உயரத்தில் சிக்கி தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு சுற்றுலா பயணியரை, தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.
கேரள மாநிலம், மூணாறு அருகே ஆனச்சால், சாகச சுற்றுலா மையத்தில், 'ஸ்கை டைனிங்' எனும் சாகச பொழுதுபோக்கு சுற்றுலா ஒன்றரை மாதத்திற்கு முன் துவங்கப்பட்டது.
அதில், கிரேனில் அந்தரத்தில் தொங்கியவாறு சுற்றுச்சூழலை ரசித்தபடி உணவு அருந்தலாம். அதற்கு ஏற்ப கூரை போன்று அமைத்து, மேஜை, 15 நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதில், கோழிக்கோட்டை சேர்ந்த கணவன், மனைவி, 7 வயது மகன், 2 வயது மகள் ஆகியோர் நேற்று மதியம் சாகச விருந்துக்கு சென்றனர். அவர்கள் நேற்று மதியம், 2:00 மணிக்கு, 120 அடி உயரத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது கிரேனில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
அதனால் அவர்கள் கீழே இறங்க இயலாமல் அந்தரத்தில் சிக்கி தவித்தனர். மூணாறு, அடிமாலி ஆகிய பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு துறையினர் வலை விரித்தும், கயிறு கட்டியும் இரண்டரை மணி நேரம் கடுமையாக போராடி, நான்கு பேரையும் மீட்டனர்.
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான சாகச சுற்றுலா அம்சங்களை கொண்ட சாகச சுற்றுலா மையத்தில், பாதுகாப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை.
சுற்றுலா பயணியர் நேற்று கிரேனில் சிக்கியபோதும், அவர்களை மீட்க மையத்தை சேர்ந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கவில்லை.
பொதுமக்கள் அளித்த தகவல்படி, தீயணைப்பு துறையினர் மீட்பு பணிக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

