காஷ்மீர் சட்டசபைக்கு முதல்முறையாக தேர்வான 51 எம்.எல்.ஏ.,க்கள்
காஷ்மீர் சட்டசபைக்கு முதல்முறையாக தேர்வான 51 எம்.எல்.ஏ.,க்கள்
ADDED : அக் 12, 2024 10:05 PM

ஸ்ரீநகர்: காஷ்மீர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 90 பேரில் 51 எம்.எல்.ஏ.,க்கள் முதல்முறையாக போட்டியிட்டுள்ளனர்.
காஷ்மீர் சட்டசபைக்கு மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சிக்கு 4 சுயேச்சைகள் ஆதரவு அளிக்க தனிப்பெரும் கட்சியானது. காங்கிரசின் 6 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் ஒமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் 90 எம்.எல்.ஏ.,க்கள் குறித்து ஆய்வு செய்ததில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.
இதன்படி 90 பேரில் 51 பேர் முதல்முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் தேசிய மாநாட்டு கட்சியினர் 24 பேர். பா.ஜ.,வினர் 15 பேர். காங்கிரசார் 2 பேர். மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் வெற்றி பெற்ற 3 பேரும், ஆம் ஆத்மியின் ஒரு எம்.எல்.ஏ.,வும் புதியவர்களே.மேலும், வெற்றி பெற்ற புதிய எம்.எல்.ஏ.,க்களில் சிலர் எம்.பி.,யாக முன்னர் பதவி வகித்துள்ளனர்.
அதன்படி தேசிய மாநாட்டு கட்சி சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் ஐகோர்ட் நீதிபதியான ஹர்னயின் மசூதி 2019 முதல் 2024 வரை லோக்சபா எம்.பி., ஆக இருந்துள்ளார். மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த முகமது பயாஸ் என்ற எம்.எல்.ஏ., 2015 முதல் 2021 வரை ராஜ்யசபா எம்.பி., ஆக இருந்துள்ளார். மேலும் தேசிய மாநாட்டு கட்சியின் பஷீர் அகமது வீரி, சைபுதீன் பட், ஜவாய்த் அகமது மிர்சல், சுரீந்தர் குமார் சவுத்ரி , சவுகத் ஹூசைன் ஆகியோர் எம்.எல்.சி.,க்களாக இருந்துள்ளனர்.பா.ஜ.,வின் விக்ரம் ரன்தவாவும், எம்.எல்.சி., ஆக இருந்துள்ளார். காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு அம்மாநில மேலவை கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.