மஹா கும்பமேளாவில் 55 கோடி பக்தர்கள் புனித நீராடுவர்: உ.பி., அரசு எதிர்பார்ப்பு
மஹா கும்பமேளாவில் 55 கோடி பக்தர்கள் புனித நீராடுவர்: உ.பி., அரசு எதிர்பார்ப்பு
ADDED : பிப் 11, 2025 02:27 PM

பிரயாக்ராஜ்: மஹா கும்பமேளாவில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை 45 கோடியை தாண்டி உள்ளது. இந்நிகழ்வில் 55 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக உ.பி., அரசு கூறியுள்ளது.
உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் மஹா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ம் தேதி துவங்கியது. வரும் 26ம் தேதி வரை நடக்க உள்ளது. மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். குறிப்பாக மகர சங்கராந்தி, மவுனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருந்தது.
அமாவாசை அன்று மட்டும் 8 கோடி பேரும், மகர சங்கராந்தி அன்று 3.5 கேடி பேரும், வசந்த பஞ்சாமி அன்று 2.57 கோடி பேரும் புனித நீராடினர். ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்களும் புனித நீராடி உள்ளனர்.இன்று காலை 10 மணியளவில் 74.96 லட்சம் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
இதனையடுத்து இந்நிகழ்வில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை 45 கோடியை தாண்டியது என உ.பி., மாநில அரசு தெரிவித்து உள்ளது. 26 ம் தேதி வரை கும்பமேளா நடைபெற உள்ளதால், 55 கோடி பேர் புனித நீராடுவர் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்து உள்ளது.