உத்தராகண்ட் பெரு வெள்ளம்; ஒரே நாளில் 566 பேர் மீட்பு
உத்தராகண்ட் பெரு வெள்ளம்; ஒரே நாளில் 566 பேர் மீட்பு
ADDED : ஆக 09, 2025 12:33 AM
உத்தரகாசி : உத்தராகண்டில் மேகவெடிப்பால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், நேற்று மட்டும் 566 பேர் மீட்கப்பட்டனர். இதுவரை, 840 பேர் மீட்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில், கடந்த 5ம் தேதி, மேகவெடிப்பு காரணமாக, குறைந்த நேரத்தில் அதிதீவிர மழை பெய்தது.
கீர் கங்கா நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால், மலை உச்சியில் இருந்து சகதியுடன் பெருவெள்ளம் பெருக்கெடுத்தது.
இதில், மலைப்பகுதிகளில் இருந்த வீடுகள், ஹோட்டல்கள், விடுதிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்டடங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கி ஐந்து பேர் பலியானதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இதுவரை இருவர் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால், பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
நான்காவது நாளாக நேற்று மீட்பு பணி துரிதகதியில் நடந்தது. வெள்ளத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான 50க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
மீட்பு மற்றும் மாயமானவர்களை தேடும் நடவடிக்கையில் ஹெலி சேவா, எம்.ஐ., - -17 மற்றும் சினுாக் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. பல பகுதிகளில் சிக்கியிருந்த சுற்றுலா பயணியரும் விமானம் வாயிலாக மீட்கப்பட்டு, மாட்லி நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கிருந்து அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 566 சுற்றுலா பயணியர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும், 300 பேரை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை, 840 பேர் மீட்கப்பட்டதாக உத்தராகண்ட் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட குப்பை, 60 அடி உயரத்துக்கு தேங்கியுள்ளதால், மீட்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறையில் முகாமிட்டுள்ள முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மீட் புப் பணிகளை ஆய்வு செய்தார்.